ADDED : நவ 11, 2024 04:17 AM
சென்னை ; 'மலைப்பகுதிகளில் உள்ள, 597 கிராமங்களில், அங்கீகாரம் இல்லாத மனைகளை வரன்முறை செய்ய, விண்ணப்பிப்பதற்கான அவகாசம், வரும் 30ம் தேதியுடன் முடிகிறது' என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில், சமவெளி பகுதிகளில், அங்கீகாரம் இல்லாத மனைகளை வரன்முறை செய்யும் திட்டம், தனியாக செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் விடுபட்ட மலைப்பகுதிகளுக்காக, புதிய திட்டம் தயாரிக்கப்பட்டது.
இதன்படி, 16 மாவட்டங்களை சேர்ந்த, 43 தாலுகாக்களில் உள்ள, 597 கிராமங்களில், அங்கீகாரம் இல்லாத மனைகளை வரன்முறை செய்ய, 2020ல் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டது.
இதில், விண்ணப்பங்கள் பெறுவதற்கான அவகாசம், 2021 நவம்பரில் முடிந்தது. விடுபட்ட மக்கள், தங்கள் விண்ணப்பங்களை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கோரினர். அதை ஏற்று, வரும் 30ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது.
இம்மாதத்துடன் அவகாசம் முடிய உள்ளதால், பொதுமக்கள் tnlayouthillareareg.in என்ற இணையதளம் வாயிலாக, மனை வரன்முறை விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.