பயிர் காப்பீடு செய்ய 30ம் தேதி வரை அவகாசம்: தமிழக வேளாண் துறை கோரிக்கை ஏற்பு
பயிர் காப்பீடு செய்ய 30ம் தேதி வரை அவகாசம்: தமிழக வேளாண் துறை கோரிக்கை ஏற்பு
ADDED : நவ 18, 2024 07:02 AM

சென்னை: தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, பயிர் காப்பீட்டிற்கான தேதியை, 30ம் தேதி வரை நீட்டித்து, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
தமிழகத்தில் சம்பா பருவ நெல் சாகுபடி மட்டுமின்றி, பல வகை பயிர்கள் சாகுபடி நடந்து வருகிறது.
இதற்கு பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில், காப்பீடு செய்வதற்கு, இம்மாதம், 15ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது.
நடப்பாண்டு வழக்கமான அளவை விட, 25 லட்சம் ஏக்கரில் மட்டுமே, சம்பா பருவ நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.
மற்ற பயிர்கள் சாகுபடியும் குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை தாமதம், அணைகள், ஏரிகளில் போதிய நீர் இருப்பு இல்லை என்பதால், சாகுபடி பரப்பு அதிகரிக்கவில்லை.
தற்போது, வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், சாகுபடி பணிகளில் விவசாயிகள் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பயிர் காப்பீட்டிற்கான அவகாசம் 15ம் தேதியுடன் முடிந்தது.
அதனால், பயிர் காப்பீடு செய்ய முடியாத நிலைக்கு, விவசாயிகள் தள்ளப்பட்டனர். பயிர் பாதிப்பு ஏற்பட்டால், இழப்பீடு கிடைப்பதில் சிக்கல் எழுந்தது.
எனவே, பயிர் காப்பீட்டு தேதியை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கும்படி, கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் முதல்வருக்கு கோரிக்கை விடுத்தனர்.
அதைத் தொடர்ந்து, பயிர் காப்பீட்டு தேதியை நீட்டிக்கும்படி, தமிழக அரசு சார்பில், வேளாண் துறை செயலர் அபூர்வா, மத்திய வேளாண் துறைக்கு கடிதம் எழுதினார்.
அதை ஏற்று, பயிர் காப்பீடு செய்வதற்கான அவகாசத்தை, 30ம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
இதற்கான உத்தரவை, மத்திய வேளாண் துறை பயிர் காப்பீட்டு பிரிவு கூடுதல் ஆணையர் காம்னா ஆர் சர்மா பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவை பின்பற்றும்படி, தமிழகத்தில் பயிர் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனங்களுக்கு, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.