திண்டிவனம் - நகரி ரயில் பாதை பணி ரூ.347 கோடி ஒதுக்கியதால் விறுவிறுப்பு
திண்டிவனம் - நகரி ரயில் பாதை பணி ரூ.347 கோடி ஒதுக்கியதால் விறுவிறுப்பு
ADDED : மே 11, 2025 12:19 AM
சென்னை:தமிழகம் மற்றும் ஆந்திராவை இணைக்கும், திண்டிவனம் - நகரி புதிய ரயில் பாதை திட்டத்துக்கு, 347 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளதால், பணிகள் வேகமெடுத்துள்ளன.
தமிழகத்தில் விழுப்புரம், திருவண்ணாமலை, வேலுார், திருவள்ளூர் மாவட்டங்கள் வழியாக ஆந்திராவை இணைக்கும் வகையில், திண்டிவனம் - நகரி புதிய ரயில்பாதை திட்டம், 2006ம் ஆண்டு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டது.
மொத்தம், 180 கி.மீ., துாரம் உடைய, இந்த ரயில் பாதை, திண்டிவனம், வெள்ளிமேடுபேட்டை, தெள்ளாறு, வந்தவாசி, மாம்பாக்கம், எருமைவெட்டி, செய்யாறு, இருங்கூர், மாமண்டூர், ஆரணி, தாமரைப்பாக்கம், திமிரி, ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜா சாலை சந்திப்பு, கொடைக்கல், சோளிங்கர், ஆர்.கே.பேட்டை, அத்திமாஞ்சேரிப்பேட்டை, பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை வழியே நகரி செல்கிறது.
போதிய நிதி ஒதுக்காதது, நிலம் கையகப்படுத்துவதில் பிரச்னை போன்றவற்றால், பல ஆண்டுகளாக பணிகளை துவக்குவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.
தற்போது, நிலம் கையகப்படுத்தும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. மத்திய பட்ஜெட்டில், 347 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதால், திட்டப்பணி வேகமெடுத்துள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகம், ஆந்திராவை இணைக்கும் முக்கியமான ரயில் திட்டம் என்பதால், பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்துக்கு மொத்தம், 1,000 கோடி ரூபாய் தேவை. ஒவ்வொரு மத்திய பட்ஜெட்டிலும், 100 முதல் 300 கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கப்பட்டு வந்தது. கடந்த 2024 - 25 பட்ஜெட்டில், 1,000 ரூபாய் மட்டும் ஒதுக்கப்பட்டது. இதனால், திட்டப்பணியில் தாமதம் ஏற்பட்டது.
நடப்பாண்டு பட்ஜெட்டில், 347.7 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாநில அரசு சார்பில் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. அடுத்தகட்டமாக பணிகளை துவக்க உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.