
ஜனவரி 30, 1927
திருநெல்வேலி மாவட்டம், வாழவந்தாள்புரம் எனும் கிராமத்தில், படிக்கராமர் - வாழந்தம்மை தம்பதிக்கு மகனாக, 1927ல் இதேநாளில் பிறந்தவர், இளங்குமரன் எனும் கிருஷ்ணன்.இவர், பள்ளிப்பருவத்திலேயே சொற்பொழிவாற்றுவது, பாடல் இயற்றுவதில் வல்லவராக இருந்தார். 'குண்டலகேசி' எனும் காவியத்தை, மதுரை அங்கயற்கண்ணி ஆலயத்தில் அரங்கேற்றினார். சென்னை பல்கலையின் புலவர் பட்டம் பெற்று, தமிழாசிரியராக பணியாற்றினார்.
இவர் எழுதிய, 'திருக்குறள் கட்டுரைத் தொகுப்பு' நுாலை 1963ல் நேருவும், 'சங்க இலக்கிய வரிசையில் புறநானுாறு' நுாலை 2003ல் அப்துல் கலாமும் வெளியிட்டனர். திருக்குறள் சொற்பொழிவுகளையும், தமிழ் முறைப்படி திருமணம், புதுமனை
புகுவிழா, மணிவிழாக்களை நடத்தி வைத்தார். நுாற்றுக்கணக்கான தமிழ் இலக்கண, இலக்கிய ஆய்வு நுால்களை எழுதிய இவரின் நுால்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் திரு.வி.க., விருதையும் பெற்ற இவர், 2021 ஜூலை 25ல், தன், 94வது வயதில் காலமானார்.
தேவநேயப்பாவாணர், பாரதிதாசனின் படைப்புகளை சேகரித்த முதுமுனைவர் பிறந்த தினம் இன்று!