இட்லி மாவுக்கு ஜி.எஸ்.டி., விலக்கு கமிஷனரிடம் வணிகர்கள் மனு
இட்லி மாவுக்கு ஜி.எஸ்.டி., விலக்கு கமிஷனரிடம் வணிகர்கள் மனு
ADDED : அக் 16, 2025 11:33 PM
சென்னை: வணிக வரித்துறை கமிஷனர் நாகராஜனிடம், உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத்தினர் மனு அளித்துள்ளனர். பின், சங்கத்தின் கவுரவ ஆலோசகர் ஜெயப்பிரகாசம் கூறியதாவது:
சரக்கு மற்றும் சேவை வரியான, ஜி.எஸ்.டி., மறுசீரமைப்பால், 90 சதவீதப் பொருட்களுக்கு, வரிச்சலுகை மற்றும் வரி குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இன்னும், 10 சதவீத பொருட்களுக்கு, வரி குறைப்பும், சலுகையும் அளிக்கப்படவில்லை.
இட்லி மாவுக்கு, 5 சதவீதம் ஜி.எஸ்.டி., உள்ளது. இட்லி மாவு ஒரு நாளில் கெட்டுப்போய் விடும். காகிதத்திற்கு, 18 சதவீதம், காகிதத்தில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களுக்கு, 5 சதவீதம் ஜி.எஸ்.டி., உள்ளது.
எனவே, இட்லி மாவுக்கு ஜி.எஸ்.டி., விலக்கு அளிக்கப்படுவதுடன், காகிதத்திற்கு, 5 சதவீதமாக ஜி.எஸ்.டி., குறைக்கப்பட வேண்டும்.
இதேபோல பல்வேறு பொருட்களுக்கு, வரி குறைப்பு, வரிச்சலுகை வழங்க, ஜி.எஸ்.டி., கவுன்சிலில் வலியுறுத்தி, நடவடிக்கை எடுக்குமாறு வணிக வரித்துறை கமிஷனரிடம் மனு அளிக்கப்பட்டது. அவர், நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.