'பாரம்பரிய உணவுகளே நம் ஆரோக்கியம் காக்கும்' பிரபல ெஷப் தாமு அட்வைஸ்
'பாரம்பரிய உணவுகளே நம் ஆரோக்கியம் காக்கும்' பிரபல ெஷப் தாமு அட்வைஸ்
ADDED : பிப் 26, 2024 02:43 AM
மதுரை : நம் முன்னோர் கற்றுக்கொடுத்த பாரம்பரிய உணவுகளில்தான் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் உள்ளன. அவற்றை இளைய தலைமுறையினருக்கும் குடும்பத் தலைவிகள் கொண்டு சேர்க்க வேண்டும் என மதுரையில் தினமலர், ஆசிர்வாத் மில்லட்ஸ் இணைந்து நடத்திய 'மில்லட் மகாராணி' போட்டியில் ெஷப் தாமு வலியுறுத்தினார்.
அவர் பேசியதாவது: தற்போது பெண்கள் வீட்டில் சமைக்கவே தயங்குகின்றனர். ருசியான நவீன உணவுகளை ஓட்டல்களில் ஆர்டர் செய்து விடுகின்றனர். நம்முன்னோர் ஆட்டுக்கல்லில் மாவு ஆட்டுவது, உரலில் உலக்கை மூலம் இடிப்பது, தானியங்களை அரைப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். அவை எல்லாம் உடலுக்கான பயிற்சிகள். தற்போது அவை காட்சிப் பொருட்களாக மாறிவிட்டன.
அம்மாக்கள் கையால் சாப்பிடுவதே குழந்தைகளுக்கு ஆரோக்கியம். அப்போது தான் அம்மாவின் நல்ல குண நலன்கள் பிள்ளைகளிடமும் போய் சேரும். ஒவ்வொரு வீட்டிலும் மருமகள்கள் பாரம்பரிய உணவுகளை சமைப்பவராக இருந்தால் அந்த குடும்பம் ஆரோக்கியமானதாக இருக்கும். தினமும் ஒரு வேளையாவது குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுங்கள். நல்ல எண்ணங்கள், எல்லோரும் சாப்பிட வேண்டும் என்பது, சமையலின்போது ஆத்மார்த்தமான மனநிலை ஆகிய மூன்றும் டேஸ்ட் ஆன சமையலுக்கு டிப்ஸ்கள். தினம் சீரகம், மிளகு, புதினா, மல்லி, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், மஞ்சள் ஆகிய 8 பொருட்களையும் உணவில் சேர்க்க தவற வேண்டாம்.
ஆச்சரியப்படவைக்கும் 'கிரியேட்டிவ்' சமையல்கள்
நிகழ்ச்சியில் காரைக்குடி டாக்டர் ஆஷா லெனின் 'உணவே மருந்து' என்ற தலைப்பில் பேசியதாவது: சிறுதானிய உணவுகள் போட்டி மூலம் தினமலர் மக்களுக்கு நல்ல விஷங்களை கொண்டு செல்வதில் முன்னிலையில் உள்ளது. பெண்கள் சமைக்கவே தயங்கும் நிலையில் நினைத்துப் பார்க்க முடியாத சிறுதானிய டிஷ்களை சமைத்துக்காட்டிய பெண்களால் ஆரோக்கிய உணவுகளை மீட்டெடுப்பதற்கான புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
குழந்தைகளும் ருசித்து சாப்பிடும் அவர்களின் கிரியேட்டிவ் சமையல் வகைகள் ஆச்சரியப்பட வைக்கின்றன. ஆரோக்கியமற்ற உணவுகளால் தற்போது 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளும் சர்க்கரை உள்ளிட்ட பல்வேறு நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
சிறுதானிய உணவு தயாரிக்கும் 100 அம்மாக்கள் இருந்தால் போதும் 'ஆரோக்கிய அம்மாக்கள்' பலமடங்கு அதிகரிப்பர். குழந்தைகளிடமிருந்தே சிறுதானியங்களால் ஏற்படும் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பழைய சாதமும், தயிரின் ஆரோக்கியம் குறித்தும், சாமை, குதிரைவாலி பயன்பாடு குறித்தும், முடக்கத்தான் கீரை, பிரண்டை வாரம் ஒருமுறை உணவில் சேர்த்தால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் இளையதலைமுறையினருக்கு எடுத்துரைக்க வேண்டும் என்றார்.

