ADDED : நவ 29, 2024 01:42 AM

சென்னை:ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், 'சமத்துவம் காண்போம்' என்ற பெயரில், வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்து, அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று துவங்கியது.
இதில், பயிற்சி கையேட்டை வெளியிட்டு, அமைச்சர் மதிவேந்தன் பேசியதாவது:
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மக்களுக்கான குடியுரிமை பாதுகாப்பு சட்டம், வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது, இந்நிகழ்ச்சியின் நோக்கம்.
கிராமங்களில் ஜாதி வேற்றுமைகளை களையும் வகையில், 'சமத்துவ மயானம்' திட்டம் கொண்டு வரப்பட்டு, கடந்த மூன்று ஆண்டுகளாக, இதை பின்பற்றும் கிராமங்களுக்கு, 10 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
நடப்பாண்டில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்து, அலுவலர்களுக்கு விரிவான பயிற்சி வழங்க, 3 கோடி ரூபாய் அரசு வழங்கியுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னாள் நீதிபதி சந்துரு, ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலர் லட்சுமி பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.