ADDED : செப் 13, 2026 12:08 AM
சென்னை: அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையத்தின் 2026ம் ஆண்டிற்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் வெளியிட்ட அறிக்கை:
மொழிபெயர்ப்பு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, முதல் பரிசு, இசபெல் வில்கெர்சனின் 'சாதி' ஆங்கில வரலாற்று ஆய்வு நுாலை மொழிபெயர்த்த மயிலை பாலு, ஜப்பானிய எழுத்தாளர் யோகோ ஒகாவாவின் நாவலை, 'நினைவுகளின் வேட்டைக்களம்' என்ற தலைப்பில் மொழிபெயர்த்த சி.லுபுனா லிலானி ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.
இரண்டாம் பரிசு, புர்ஹான் ஸென்மெஸ் துருக்கி மொழியில் எழுதிய, 'இஸ்தான்புல்' என்ற நாவலை மொழிபெயர்த்த, முடவன் குட்டி முகமது அலி, ஜைலி அமாதுா அமாலின் பிரெஞ்சு நாவலை, 'பொறுமையற்றவர்கள்' என்ற தலைப்பில் மொழிபெயர்த்த ஆர்.காயத்ரி ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.
மூன்றாம் பரிசு, டோபி வால்ஷ் எழுதிய செயற்கை நுண்ணறிவு நுாலை, 'செயற்கை நுண்ணறிவின் சுருக்கமான வரலாறு' என, மொழிபெயர்த்த எம்.ஜோதிமணி மற்றும் பெ.சசிக்குமார், சந்தோஷ் ஏச்சிக்கானம் மலையாளத்தில் எழுதிய சிறுகதை தொகுப்பை, 'பிரியாணி' என மொழிபெயர்த்த டி.எம்.ரகுராம் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.
மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை எழுதிய 'திருஞானசம்பந்தர் காலம் ஓர் ஆராய்ச்சி' என்ற வரலாறு நுாலை மொழிபெயர்த்த சு.மோதிலால் நேரு, உமையாள் ராமநாதன் ஆங்கிலத்தில் எழுதிய நாவலை 'நிழல்களுக்கு எதிராக' என மொழிபெயர்த்த சித்தார்த்தன் சுந்தரம் ஆகியோருக்கும் மூன்றாம் பரிசு வழங்கப்படுகிறது. இதற்கான விருதுகள் அக்., 2ம் தேதி மயிலாப்பூர் ஏ.வி.எம்.ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
