சி.என்.ஜி., பஸ்களை அதிகரிக்க போக்குவரத்து கழகங்கள் முடிவு
சி.என்.ஜி., பஸ்களை அதிகரிக்க போக்குவரத்து கழகங்கள் முடிவு
ADDED : ஜன 22, 2025 11:56 PM
சென்னை:'சி.என்.ஜி., தொழில்நுட்பத்தால் டீசல் செலவு குறைவதால், இந்த வகை பஸ்களை அதிகரிக்க, தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய உள்ளோம்' என, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துஉள்ளனர்.
சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் டீசலுக்கு மாற்றாக, சி.என்.ஜி., எனப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு, எல்.என்.ஜி., எனப்படும் இயற்கை எரிவாயு வாயிலாக பஸ்களை இயக்க, தமிழக அரசு முடிவு செய்தது.
சோதனை முயற்சியாக, ஏழு போக்குவரத்துக் கழகங்களில், சி.என்.ஜி., பஸ்கள் இயக்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு நவ., மாதத்தில், விரைவு பஸ்களிலும் சி.என்.ஜி., தொழில்நுட்பம் அமல்படுத்தப்பட்டது.
இந்த வகை பஸ்களில், எந்த சிக்கலும் எழாத நிலையில், ஓட்டுனர் -- நடத்துனர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:
அரசு போக்குவரத்து கழகங்களில், 'பி.எஸ்., 4' வகை டீசல் பஸ்களை, சி.என்.ஜி., பஸ்களாக மாற்றுவதன் வாயிலாக எரிபொருள் சேமிப்பு என்பதோடு, பராமரிப்பு செலவு, இயக்கச் செலவு வெகுவாக குறைகிறது.
இந்த பஸ்களை சோதனை முறையில் மாற்றியமைத்து இயக்க, இந்தியன் ஆயில் உள்ளிட்ட எரிவாயு நிறுவனங்களும் பங்களிப்பு செய்கின்றன. ஒரு முறை எரிவாயு நிரப்பினால், 600 கி.மீ., துாரம் வரை பயணிக்க முடிகிறது.
இந்த வகை பஸ்கள் வாயிலாக, ஒரு கி.மீ.,க்கு 3 முதல் 4 ரூபாய் வரை மிச்சமாகிறது. அதன்படி, ஒரு பஸ்சுக்கு ஒரு மாதத்துக்கு, 75,000 ரூபாய் மிச்சமாகிறது. அரசு போக்குவரத்து கழகங்களில் தற்போது, 21 பஸ்கள் சோதனை முறையில் இயக்கப்படுகின்றன.
எனவே, இந்த வகை பஸ்களை அதிகரிக்க, தமிழக அரசிடம் பரிந்துரை செய்ய உள்ளோம். இதற்கான, அறிக்கையை தயாரித்து வருகிறோம். எனவே, சி.என்.ஜி., பஸ்களின் எண்ணிக்கை, 50 ஆக விரைவில் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.