பஸ் ஓட்டும் போது மொபைலில் பேசினால் 29 நாள் 'சஸ்பெண்ட்'
பஸ் ஓட்டும் போது மொபைலில் பேசினால் 29 நாள் 'சஸ்பெண்ட்'
ADDED : டிச 24, 2024 05:54 AM

சென்னை: 'பஸ் ஓட்டும் போது, மொபைல் போன், ஹெட்போன் பயன்படுத்தும் ஓட்டுநர்கள், 29 நாட்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்படுவர்' என, அரசு போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பயணியர் பாதுகாப்பு கருதி, அரசு பஸ்களை இயக்கும் போது, அதன் ஓட்டுநர்கள் மொபைல் போன் பயன்படுத்த, 2014 முதல் தடை உள்ளது. ஆரம்பத்தில் மாதத்தில் ஓரிரு முறை திடீரென சோதனை நடத்தப்பட்டது.
பஸ் ஓட்டும் போது மொபைல் போன் பேசுவது உறுதி செய்யப்பட்டால், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். சமீப நாட்களாக, சோதனைகள் குறைந்து விட்டன. குறிப்பாக, கொரோனா பாதிப்பு காலத்தில் இருந்து, பெரிய அளவில் சோதனை நடத்தப்படவில்லை.
அரசு பஸ்களில் சமீப காலமாக, ஓட்டுநர்கள் பலர் மொபைல் போன் பேசிக் கொண்டும், ஹெட்போன் பயன்படுத்தி பாட்டு கேட்டபடியும், பஸ்களை இயக்கி வருகின்றனர். இது தொடர்பாக, பயணியரிடம் இருந்து புகார்கள் வந்துள்ளன. சிலர் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டும் வருகின்றனர்.
இதுகுறித்து, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:
இந்த விவகாரத்தில், 1,000க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் மூன்று நாட்கள் மட்டுமே, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்; பின், 13 நாட்களாக அதிகரிக்கப்பட்டது. சில மாதங்களாக, அரசு பஸ் ஓட்டுநர்கள் மீது, பயணியர் புகார்கள் அதிகரித்து வருகின்றன. எனவே, விதிமீறலில் ஈடுபடும் ஓட்டுநர்களை, 29 நாட்கள் 'சஸ்பெண்ட்' செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.
இந்த தகவல் குறித்த நோட்டீஸ், தமிழகம் முழுதும் உள்ள, 300க்கும் மேற்பட்ட பணிமனைகளில் தகவல் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து கடைப்பிடிக்கவும், விதிமீறும் ஓட்டுநர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்துள்ளோம். மேலும், பஸ்களில் திடீர் சோதனை நடத்த குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.