UPDATED : ஜன 13, 2024 04:20 PM
ADDED : ஜன 02, 2024 11:54 PM

திருச்சி : திருச்சி விமான நிலையத்தில், 1,112 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார்.
''வணக்கம்... தமிழ் குடும்ப உறவுகள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்!” என்று கூறி உரையை தொடங்கினார். பின், பிரதமர் பேசியதாவது: தற்போது துவக்கப்படும், 20,000 கோடி ரூபாய் திட்டங்களால், தமிழகம் வளர்ச்சி அடையும்; இத்திட்டங்கள் வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும். சில வாரங்களாக தமிழக மக்கள் மழை வெள்ளத்தால், அதிக துயரை அனுபவித்துள்ளீர்கள். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
பிரதிபலிப்பு
தமிழக மக்களுக்கு, மத்திய அரசு எப்போதும் துணை நிற்கும். தமிழக அரசுக்கு சாத்தியமான உதவிகளை மத்திய அரசு செய்யும்.அடுத்த, 25 ஆண்டுகளில், இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற நாம் பாடுபடுகிறோம். வளர்ச்சி என்றால் பொருளாதாரம், கலாசாரம் இரண்டுமே வளர வேண்டும். அந்த வகையில், நம் நாட்டின் சரியான பிரதிபலிப்பு தமிழகம் தான்.
தமிழ் மண்ணில் உருவான வள்ளுவர், சுப்பிரமணிய பாரதி உள்ளிட்ட ஞானிகள் அரிய படைப்புகளை, இலக்கியங்களை உலகிற்கு தந்துள்ளனர். எனவே தான், நான் தமிழகம் வரும் போதெல்லாம் புதிய சக்தியை பெற்றுச் செல்கிறேன். திருச்சி என்றாலே, வளமான வரலாற்று சான்றுகள் உள்ளன. பல்லவர்கள், சோழர்கள், நாயக்கர்கள் இங்கு சிறப்பான ஆட்சியை செய்துள்ளனர். எனக்கு ஏராளமான தமிழ் நண்பர்கள் உள்ளனர். அவர்களிடம் இருந்து, தமிழ் கலாசாரத்தை தெரிந்து கொண்டேன்.
எனவே தான், உலகில் எங்கு சென்றாலும், தமிழ் பற்றியும், கலாசாரம் பற்றியும் பேசாமல் வர மாட்டேன். புதிய பார்லிமென்ட் கட்டடத்தில் செங்கோல் நிறுவப்பட்டதே, அந்த உணர்வின் வெளிப்பாடு தான்.பத்தாண்டுகளில் இந்தியா வேகமாக வளர்ந்து, நவீன கட்டமைப்புகளை பெற்றுள்ளது. மிகப்பெரிய முதலீட்டாளர்கள் எல்லாம் இந்தியாவில் முதலீடு செய்து வருகின்றனர். 'மேக் இன் இந்தியா' திட்டத்தின், 'பிராண்ட் அம்பாசிடராக' தமிழகம் மாறி வருகிறது.
புதிய விமான முனையம் வாயிலாக இணைப்புத்திறன் மூன்று மடங்கு அதிகரிக்கும். தொழில் வளம், கல்வி பெருகும். தமிழகத்தில் புதிதாக ஐந்து ரயில் திட்டங்கள் துவங்கப்பட்டுள்ளன. இதனால், தொழில் வளர்ச்சி பெருகும். ஸ்ரீரங்கம், மதுரை, ராமேஸ்வரம், சிதம்பரம், வேலுார் போன்ற இடங்களை இத்திட்டம் இணைக்கிறது.
ரூ.120 லட்சம் கோடி
புதிய திட்டங்களால், தமிழகம் இன்னும் விரைவான வளர்ச்சி பெறும். அதன் வாயிலாக நாடும் வளர்ச்சி அடையும். பத்து ஆண்டுகளில், மத்திய அரசானது, கடலோர பகுதிகள் முன்னேற்றம், மீனவர்களின் நலன் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. மீன்வளத்துக்கு தனித்துறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. சாகர் மாலா திட்டத்தால், துறைமுகங்கள், நல்ல சாலைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. காமராஜர் துறைமுகமும், சிறந்த துறைமுகமாக உருவாகியுள்ளது. தமிழகத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு வரலாறு காணாத நிதியை செலவு செய்து வருகிறது.
கடந்த, 10 ஆண்டுகளில் மாநிலங்களுக்கு, 120 லட்சம் கோடியை மத்திய அரசு அளித்துள்ளது. இதுவே, 2014க்கு முன் இருந்த ஆட்சியில், 30 லட்சம் கோடியாக இருந்தது. தமிழகத்தில் லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு மத்திய அரசின் ரேஷன் அரிசி, கான்கிரீட் வீடு, கழிப்பறை வசதி, எரிவாயு இணைப்புகள் கொடுக்கப்பட்டு உள்ளன. தமிழ் இளைஞர்களின் மீது, எனக்கு அபார நம்பிக்கை உள்ளது. அவர்களால் இந்தியா புதிய உத்வேகம் பெறும்.இவ்வாறு பிரதமர் பேசினார்.
தமிழுக்கு முக்கியத்துவம்
தமிழில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து விட்டு பேச்சை துவக்கிய பிரதமர், 'என் குடும்ப உறவுகளே, சொந்தங்களே, தமிழ் குடும்பமே' என்று, பல முறை தமிழில் கூறியபோது பெரும் கைதட்டல் எழுந்தது. பின்னர், பேச்சை ஹிந்தியில் தொடர்ந்தார். அதை ஒருவர் தமிழில் மொழி பெயர்த்தார்.
விஜயகாந்துக்கு புகழாரம்!
பிரதமர் பேசுகையில், ''கேப்டன் விஜயகாந்த்தை, சில நாட்களுக்கு முன் இழந்தோம். அவர் சினிமாவில் மட்டுமல்ல, அரசியலிலும் கேப்டனாக இருந்தார். தேசிய நலனுக்கு அவர் முன்னுரிமை கொடுத்தார். அவர் சினிமா வாயிலாக, மக்கள் மனதை கொள்ளை கொண்டிருந்தார்.
''அவரது இறப்பு, சினிமாவுக்கும், அரசியலுக்கும் இழப்பு. அதேபோல, நாட்டின் உணவு உற்பத்தியில் முக்கிய பங்காற்றிய விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனையும் கடந்த ஆண்டு இழந்தோம்,'' என்றார்.