ஸ்ரீரங்கத்தில் தேவகவுடா தரிசனம் காவிரிக்கு தீர்வு வரும் என்கிறார்
ஸ்ரீரங்கத்தில் தேவகவுடா தரிசனம் காவிரிக்கு தீர்வு வரும் என்கிறார்
ADDED : ஆக 23, 2024 02:50 AM

திருச்சி:“காவிரி பிரச்னை குறித்து, தமிழக ஆட்சியாளர்களுக்கு முழுமையாக தெரியும். விரைவில் ஒருமித்த கருத்து ஏற்படும்,” என, முன்னாள் பிரதமர் தேவகவுடா, 91, கூறினார்.
பெங்களூரில் இருந்து தனி விமானத்தில் திருச்சி வந்த தேவகவுடா, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மூலவர் பெரிய பெருமாள், தாயார் சன்னிதிகளுக்கு பேட்டரி காரில் சென்று, நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
கோவில் நிர்வாகம் சார்பில், அவருக்கு மரியாதை செய்து, பெருமாள் சந்தன அபயஹஸ்தம் நினைவு பரிசாக வழங்கப்பட்டது.
பின், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
நான்கு ஆண்டுகளுக்கு பின், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு வந்துள்ளேன். உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தாலும், மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவாக, நாணயம் வெளியிட்டது குறித்து, எந்தவித கருத்தும் சொல்ல விரும்பவில்லை.
தமிழகத்தில் உள்ள ஆட்சியாளர்களுக்கும், இதற்கு முன் ஆட்சி செய்தவர்களுக்கும் காவிரி பிரச்னை குறித்து முழுமையான விபரங்கள் தெரியும்.
பெங்களூருவில் வசிக்கும், 1.40 கோடி பேர் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்; இது, அனைவரும் அறிந்த செய்தி தான்.
தமிழகத்தில் உள்ள கட்சிகளுக்கும் இது தெரியும். இதற்கு மேல், இது குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை. பெங்களூரு உள்ளிட்ட ஒன்பது மாவட்ட மக்கள், குடிநீருக்காக மிகவும் சிரமப்படுகின்றனர்.
காவிரி பிரச்னை குறித்து இரண்டு மாநிலங்களுக்கும் ஒருமித்த கருத்து ஏற்படும்; அந்த நாள் விரைவில் வரும். அன்று இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின், ஸ்ரீரங்கம் - மேலுார் சாலையில் உள்ள பவுண்டரீகபுரம் மடத்திற்கு சென்று, ஜீயரிடம் ஆசி பெற்றார்.

