அம்பானி வீட்டில் திருட பலே திட்டம் திருச்சி கொள்ளையர்கள் 5 பேர் கைது
அம்பானி வீட்டில் திருட பலே திட்டம் திருச்சி கொள்ளையர்கள் 5 பேர் கைது
ADDED : மார் 18, 2024 01:29 AM
திருச்சி: பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டு திருமண நிகழ்ச்சியில் திருட திட்டமிட்டு, கார் கண்ணாடியை உடைத்து பணம், லேப்டாப் திருடிய, திருச்சி, ராம்ஜி நகரை சேர்ந்த ஐந்து பேரை, டில்லி போலீசார் கைது செய்தனர்.
குஜராத் மாநிலம், ஜாம் நகரில், தொழிலதிபர் முகேஷ் அம்பானி மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம் அண்மையில் நடந்தது. இந்த திருமண விழாவில் பங்கேற்க உலகம் முழுதும் இருந்து அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள் என, முக்கிய பிரமுகர்களும், நாட்டின் பல்வேறு துறை பிரபலங்களும் வந்திருந்தனர்.
ஜாம் நகரில் திருமண விழாவுக்கு வந்தவர்களில் சிலரின் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு, லேப்டாப், பணம் திருடு போனது. அதேபோல், ராஜ்கோட்டில் நிறுத்தியிருந்த பென்ஸ் கார் கண்ணாடியை உடைத்து, 10 லட்சம் ரூபாய் ரொக்கம், லேப்டாப் திருடப்பட்டது.
இதுகுறித்து ராஜ்கோட் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அவர்கள், அப்பகுதி கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்த்து, சந்தேகத்துக்கு உரிய நபரை பிடித்து விசாரித்தனர்.
அந்த நபர் அளித்த தகவலின் படி, டில்லியில் தங்கியிருந்த, தமிழகத்தின், திருச்சி மாவட்டத்தில் உள்ள ராம்ஜி நகரை சேர்ந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில், முக்கிய நபரை தேடி வருகின்றனர்.
ராஜ்கோட் எஸ்.பி., ராஜூ பர்கவ் கூறியதாவது:
திருச்சி அருகே ராம்ஜி நகரை சேர்ந்த ஜெகன், தீபக், குணசேகர், முரளி, ஏகாம்பரம் ஆகியோர், ஜாம் நகரில் அம்பானி திருமண நிகழ்ச்சிக்கு வருபவர்களின் கார்களை குறி வைத்து திருட வந்துள்ளனர்.
அங்கு பாதுகாப்பு தீவிரமாக இருந்ததால், திட்டத்தை கைவிட்டு, ஒரு காரின் கண்ணாடியை மட்டும் உடைத்து, லேப்டாப் திருடி தப்பி வந்துள்ளனர். பின், ராஜ்கோட் வந்து, அங்கு நிறுத்தப்பட்டிருந்த பென்ஸ் கார் கண்ணாடியை உடைத்து, 10 லட்சம் ரூபாய், லேப்டாப்பை திருடியுள்ளனர்.
இது விசாரணையில் தெரிய வந்ததால், டில்லியில் இருந்த மேற்கண்ட ஐந்து பேரையும் கைது செய்து உள்ளோம். இந்த கும்பலை சேர்ந்த மதுசூதனன் என்பவர் தலைமறைவாகி விட்டார்.
அவரையும் தேடி வருகிறோம். இந்த கும்பல் நான்கு மாதங்களில், 11 இடங்களில் கைவரிசை காட்டியுள்ளது. இவர்கள் கேரளா, மஹாராஷ்டிரா போன்ற இடங்களில் கைவரிசை காட்டியுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

