ADDED : நவ 17, 2025 01:22 AM
சென்னை: ''சபரிமலை செல்லும் பக்தர்கள், விமானத்தில் இருமுடி எடுத்து செல்ல விதிக்கப்பட்ட தடையை, மத்திய அரசு உடனடியாக நீக்க வேண்டும்,'' என, தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார்.
அவர் அளித்த பேட்டி:
ஹிந்துக்களுக்காக பாடுபடுவதாகவும், ஹிந்துக்களுக்கான அரசு எனவும், பா.ஜ.,வினர் சொல்கின்றனர். நானும் ஹிந்து தான்.
ஆனால், நடப்பாண்டு சபரிமலை செல்லும் பக்தர்கள், விமானத்தில் இருமுடி எடுத்து செல்ல, மத்திய அரசு அனுமதி மறுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹிந்துக்களுக்கு ஆதரவானவர்கள் எனில், எதற்காக இதுபோன்ற நடவடிக்கை என்ற கேள்வி எழுகிறது. சபரிமலை செல்லும் பக்தர்களின் கோரிக்கையை, மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
வெளிநாடுகளில் இருந்து சபரிமலை வருவோர், குறிப்பாக தென் மாநில பக்தர்கள், பா.ஜ., அரசின் இத்தகைய நடவடிக்கையால் பெரிதும் பாதிக்கப்படுவர். வாக்காளர் திருத்தப் பணிக்கு எதிராக, த.வெ.க.,வின் போராட்டம் வரவேற்கத்தக்கது.
அனைவரும் சேர்ந்து, எஸ்.ஐ.ஆர்.,க்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் த.வெ.க., நிலைப்பாட்டை வரவேற்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

