'அ.தி.மு.க., பிரசார கூட்டங்களுக்கு த.வெ.க.,வினர் விருப்பப்பட்டு வரவேற்பு': இபிஎஸ்
'அ.தி.மு.க., பிரசார கூட்டங்களுக்கு த.வெ.க.,வினர் விருப்பப்பட்டு வரவேற்பு': இபிஎஸ்
ADDED : அக் 13, 2025 01:16 AM

ஓமலுார்: ''அ.தி.மு.க., பிரசார கூட்டங்களுக்கு, த.வெ.க.,வினர் விருப்பப்பட்டு வரவேற்பு கொடுக்கின்றனர். அவர்களை, கட்சி தலைமை அனுமதி பெற்று வர, அறிவுறுத்தியுள்ளோம்,'' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி கூறினார்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அணை உபரி நீரேற்றும் திட்டத்தில் நிரம்பிய, நங்கவள்ளி, வைரவனேரி, வாத்திப்பட்டி ஏரிகளை, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி நேற்று பார்வையிட்டு மலர் துாவினார்.
பின்னர், அவர் அளித்த பேட்டி:
அ.தி.மு.க., பிரசார கூட்டங்களில், த.வெ.க.,வினர் விருப்பப்பட்டு வரவேற்பு கொடுக்கின்றனர். அவர்களை, கட்சி தலைமையின் அனுமதி பெற்று வருமாறு அறிவுறுத்தியுள்ளோம். இதை, தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினரால் பொறுத்துக்கொள்ள முடியாமல் விமர்சிக்கின்றனர்.
பா.ஜ.,வுடன் நாங்கள் கூட்டணி வைத்துள்ளோம். அதனால் கடுமையாக விமர்சிக்கின்றனர். யாருடன் கூட்டணி வைத்தால் இவர்களுக்கு என்ன? தி.மு.க., உடன் காங்கிரஸ், வி.சி.க., கம்யூனிஸ்ட்டுகள் கூட்டணி வைத்துள்ளனர். அவர்கள், அ.தி.மு.க., கூட்டணி குறித்தே பேசுகின்றனர். அதற்கான தகுதி அவர்களுக்கு இல்லை.
அ.தி.மு.க., கூட்டணியில் இருக்கும் கட்சிகள் சுதந்திரமாக செயல்படுகின்றன; ஆனால், தி.மு.க., கூட்டணியில் அப்படி இல்லை. ஆட்சியில் பங்கும், அதிக தொகுதிகளும் வேண்டும் என காங்., வலியுறுத்த துவங்கி உள்ளதால், கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
தேர்தலுக்கு ஒரு மாதத்துக்கு முன்பு கூட கூட்டணி இறுதி செய்யலாம். த.வெ.க., தலைவர் விஜய், எங்களுடன் கூட்டணி பேசினாரா என கேட்கின்றனர். எல்லாத்தையும் வெளிப்படையாக சொல்ல முடியாது. கரூரில் 41 பேர் இறந்து போன சம்பவத்தை தொடர்ந்து, மருத்துவமனைக்குச் சென்று ஆறுதல் கூறினோம்; அவ்வளவுதான்.
இவ்வாறு அவர் கூறினார்.