கர்நாடகாவில் லாரிகள் வேலைநிறுத்தம்; இயக்கப்படாத 70 சதவீத தமிழக லாரிகள்
கர்நாடகாவில் லாரிகள் வேலைநிறுத்தம்; இயக்கப்படாத 70 சதவீத தமிழக லாரிகள்
ADDED : ஏப் 16, 2025 04:56 AM

கர்நாடகாவில் நேற்று முதல் லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் துவங்கியதால், தமிழகத்திலிருந்து ஓசூர் வழியாக வழக்கமாக செல்லும் லாரிகளில், 70 சதவீதத்திற்கும் மேல் இயக்கப்படவில்லை.
கர்நாடகா மாநில லாரி உரிமையாளர்கள், டீசல் விலை உயர்வு மற்றும் சுங்க கட்டண உயர்வை கண்டித்து, நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். தமிழகத்திலிருந்து கர்நாடகா வழியாக மஹாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு தினமும், 4,000க்கும் மேற்பட்ட லாரிகள் செல்கின்றன. கர்நாடகா வழியாக தமிழகத்திற்கு, 3,000க்கும் மேற்பட்ட லாரிகள் வருகின்றன.
இதன் வாயிலாக தமிழகத்திற்கும், இங்கிருந்து பிற மாநிலங்களுக்கும் அத்தியாவசிய உணவு பொருட்கள், காய்கறிகள், பழங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. கர்நாடகாவில் லாரிகள் வேலைநிறுத்தத்தால், அம்மாநிலத்திற்கு செல்லாமல், தமிழக பதிவு எண் உடைய மற்றும் பிற மாநில பதிவு எண் உடைய லாரிகள், தமிழக எல்லையில் சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ளன.
கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி மற்றும் பெங்களூரு அருகே பொம்மசந்திரா பகுதிகளில், லாரிகளை மொத்தமாக நிறுத்தி, கர்நாடகா மாநில லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 70 சதவீதத்திற்கும் மேலான லாரிகள், தமிழகத்திலிருந்து கர்நாடகா செல்லவில்லை.
தமிழகம் - கர்நாடகா இடையே தினசரி சரக்கு போக்குவரத்துக்காக இயக்கப்படும், 700க்கும் மேற்பட்ட லாரிகளில், 50 சதவீதத்திற்கு மேல் இயக்கப்படவில்லை. கனிமவளங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச்சென்ற லாரிகள் மட்டும், கர்நாடகா மாநிலத்திற்குள் நேற்று தொடர்ந்து இயக்கப்பட்டன.
தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் தன்ராஜ் கூறியதாவது: கர்நாடகா லாரி உரிமையாளர் சங்க வேலை நிறுத்தத்துக்கு, தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனம் ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால், கர்நாடகா, அதன் வழியே செல்லும் லாரிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. 10,000க்கும் மேற்பட்ட உரிமையாளர்கள், வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும், 'பார்டர் செக்போஸ்ட்' அகற்றுதல், ஆன்லைனில் வழக்கு போடுவதை தவிர்த்தல், பெட்ரோல், டீசல் விலையை குறைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -