ADDED : ஜன 10, 2025 11:23 PM
சென்னை:''தி.மு.க., ஆட்சியில், 8,406 கோவில்களுக்கு அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்,'' என, அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
சட்டசபையில் கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
காங்., - கணேஷ்: ஊட்டி லோயர் பஜார் பகுதியில் உள்ள சுப்பிரமணியர் கோவில், ஜலகண்டேஸ்வரர் கோவில், மாரியம்மன் கோவில், சிவன் சன்னிதி கொடியேற்ற மண்டபம், உற்சவ மண்டபங்கள் போன்றவற்றை விரைந்து புனரமைத்து குடமுழுக்கு நடத்த வேண்டும்.
நீலகிரி மாவட்டம், மஞ்சக்கம்பையில் நாகராஜர் கோவில் உள்ளது. அதற்கு அறங்காவலர்களை நியமிக்க வேண்டும்.
அமைச்சர் சேகர்பாபு: சுப்பிரமணியர் கோவிலில் வரும் 31ம் தேதி: ஜலகண்டேஸ்வரர் கோவிலில், மார்ச் 15ம் தேதி குடமுழுக்கு நடத்தப்படும். மாரியம்மன் கோவிலுக்கு திருப்பணி முடித்து, பிப்., 19ல் குடமுழுக்கு நடத்தப்படும்.
தி.மு.க., ஆட்சியில் இதுவரை, 8,406 கோவில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
பிப்., மாத இறுதிக்குள், ஊட்டி தொகுதியில் உள்ள ஏழு கோவில்களுக்கும் அறங்காவலர்கள் நியமிக்கப்படுவர்.
புதுக்கோட்டை தேவஸ்தானத்தில், 227 கோவில்கள் உள்ளன. ஒரு சில கோவில்களில் மட்டுமே வருமானம் வருகிறது.
மற்ற கோவில்களில் எல்லாம் ஒருகால பூஜைக்கு கூட நிதி இல்லாத சூழல் இருந்தது.
தற்போது, புதுக்கோட்டை தேவஸ்தான கோவிலுக்கு ஆண்டுக்கு, 6 கோடி ரூபாய் அரசின் சார்பில் மானியமாக வழங்க, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
காசி விஸ்வநாதர் கோவில் ஆய்வு செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

