தேஜ கூட்டணியில் இருந்து வெளியேற அண்ணாமலை காரணமல்ல; டிடிவி தினகரன் விளக்கம்
தேஜ கூட்டணியில் இருந்து வெளியேற அண்ணாமலை காரணமல்ல; டிடிவி தினகரன் விளக்கம்
ADDED : செப் 07, 2025 01:06 PM

மானாமதுரை: தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறியதற்கு அண்ணாமலை காரணமல்ல என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறி உள்ளார்.
சிவகங்கை மாவட்டம், மானாதுரையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
இபிஎஸ்சை தமிழகத்தின் முதல்வர் வேட்பாளர் என்று எங்கும் அமித்ஷா சொல்லவில்லை. அதிமுகவைச் சேர்ந்த ஒருவர் என்று தான் சொல்லி உள்ளார். ஆனால் இபிஎஸ் தானே தன்னை முதல்வர் என்று செல்லும் இடங்களில் சொல்லிக் கொண்டு இருக்கிறார்.
லோக்சபா தேர்தலில் மோடி மீண்டும் பிரதமராக வேண்டும், நாட்டின் பாதுகாப்புக்கு சிறந்ததாக இருக்கும் என்கிற காரணத்திற்காக தான் நிபந்தனையற்ற ஆதரவு என்ற அடிப்படையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தோம்.
ஓபிஎஸ்சுக்கு இவர் (நயினார் நாகேந்திரன்) பேசுகிறார் என்னும்போது அவரின் மனநிலை என்ன என்று தெரிகிறது. ஓபிஎஸ்சும் நானும் ஒன்றாகத்தான் கூட்டணிக்குள் சென்றோம். எனக்காக அவர் மகன் வெற்றி பெற்ற தேனி தொகுதியையே விட்டுக் கொடுத்தவர் ஓபிஎஸ்.
முதல்நாளில் இருந்து அண்ணன் அவசரப்பட வேண்டாம், பொறுமையாக இருங்கள் என்று அண்ணாமலை எங்களிடம் கூறி வந்தார். இபிஎஸ்சை ஆதரித்து, எங்கள் தற்கொலைக்கு சமமான முடிவை எடுக்க முடியாது என்று அவரிடமே சொன்னோம். அவர் தலைவராக (அண்ணாமலை) இருந்தபோது நடுநிலைமையுடன் செயல்பட்டார்.
அவரின் (நயினார் நாகேந்திரன்) துரோகம் நியாயப்படுத்தப்பட்டதாக உணர்ந்தோம், கூட்டணியில் இருந்து வெளியேறினோம். எங்கள் பின்னணியில் அண்ணாமலை இருக்கிறார் என்று யாராவது சொன்னால், அவர்களுக்கு அரசியல் தெரியவில்லை என்று அர்த்தம். செங்கோட்டையனை உறுதியாக சந்திப்பேன்.
நடிகர் விஜய் மக்கள் விரும்பும் நடிகர், அவர் துணிச்சலாக ஒரு கட்சியை ஆரம்பித்துள்ளார். அதை பார்த்து பொறாமைப்பட வேண்டிய அவசியம் என்ன? விஜயகாந்த் போல் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று நான் கூறியது யதார்த்தம். இது விஜய்யை நோக்கி நகர்வதாக அர்த்தம் இல்லை. நீங்கள் நினைக்காத ஒரு கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறது.
இவ்வாறு டிடிவி தினகரன் பேட்டியளித்தார்.