ADDED : மார் 10, 2024 11:37 PM

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கருப்பம்புலத்தை சேர்ந்தவர் ரவி. இவர், 2021ம் ஆண்டு உறவினர்களுக்குள் ஏற்பட்ட சொத்து தகராறில் படுகொலை செய்யப்பட்டார். அவரது உறவினர் சிவராஜா, 41, போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
சில நாட்களுக்கு முன் ஜாமினில் வந்த சிவராஜா, 41, மார்ச் 7ல் நாகப்பட்டினத்திற்கு பைக்கில் சென்றார். தேத்தாக்குடி என்ற இடத்தில் சென்ற போது, காரில் வந்த கும்பல், சிவராஜாவை வழிமறித்து, சரமாரியாக வெட்டிக்கொலை செய்து தப்பியது. பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்தது.
வேதாரண்யம் போலீசார் வழக்கு பதிந்தனர். தனிப்படையினர் கொலையாளிகளை தேடினர். முக்கிய குற்றவாளியான ரவியின் சகோதரர் முருகானந்தம், 52, திருவாரூர் கோர்ட்டில் சரணடைந்தார்.
கூலிப்படையை சேர்ந்த சேலம், சின்ன திருப்பதியை சேர்ந்த தீனதயாளன், 34, நாகப்பட்டினம் அருள்பிரகாசம், 34, ஆகியோரை, தனிப்படை போலீசார், நேற்று முன்தினம் கைது செய்தனர். கொலையில் தொடர்புடைய மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

