ADDED : அக் 31, 2026 08:17 PM
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே, மின்சாரம் பாய்ந்து, இரு வேறு சம்பவங்களில் இருவர் பலியாயினர்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த, அருந்தோடு கிராமத்தை சேர்ந்தவர் ஜித்தீஸ், 15. சென்னையில், 10ம் வகுப்பு படித்து வந்தார். ஜித்தீஸின் அத்தை விமலா, வந்தவாசி அடுத்த, கன்னிகாபுரம் கிராமத்தில் உள்ளார். விமலா மகனுக்கு, நேற்று (அக்.,30) விழுப்புரத்தில் திருமணம் நடக்க இருந்தது.
திருமணத்திற்காக சென்னையிலிருந்து வந்திருந்த இவர், விமலா வீட்டிற்கு சென்றார். அப்போது, அங்கு பந்தலில் அமைக்கப்பட்டிருந்த ‘சீரியல்’ மின்விளக்கில் இருந்து மின்கசிவு ஏற்பட்டதில், பந்தலை தொட்டபோது, மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே ஜித்தீஸ் பலியானார்.
தேசூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். ஜித்தீஸ் பலியானதால், திருமணம் நின்றது.
ஆரணி அடுத்த, கஸ்தம்பாடி கிராமத்தை சேர்ந்த விவசாயி பாஸ்கரன், 55. இவரது மனைவி செல்வி, 51. இவர் இன்று (அக்.,31), வீட்டில் துணி காய வைத்தபோது, அருகிலிருந்த மின் வயரில் கைப்பட்டது. அப்போது, மின் ஒயரில் ஏற்பட்ட மின்கசிவால் மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டார்.
இதை பார்த்த பாஸ்கரன், மனைவியை காப்பாற்ற முயன்றார். அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் செல்வி உயிரிழந்தார். களம்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
