ADDED : மார் 10, 2024 11:21 PM
கொடைரோடு : திண்டுக்கல் மாவட்டம் கல்லடிபட்டி அருகே கிணற்றில் மூழ்கி நண்பர்கள் இருவர் பலியாயினர்.
அம்மையநாயக்கனுார் அருகே கல்லடிபட்டியை சேர்ந்த அரவிந்த் 20; வாடிப்பட்டி தனியார் பாலிடெக்னிக் கல்லுாரியில் ஐ.டி.ஐ., படித்தார். நேற்று விடுமுறை என்பதால் இவர் நண்பர் முத்துகிருஷ்ணன் 24, உடன் அதே ஊரில் உள்ள பிரவீன் என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளையில் வேலை பார்க்க சென்றார்.
வேலை முடித்து இருவரும் வீட்டிற்கு புறப்பட்டபோது அவர்களுடன் பிரவீனும் வந்தார்.
மூவரும் கல்லடிப்பட்டி பிரிவு அருகே உள்ள மதுரையை சேர்ந்த ஜெயராஜ் என்பவருடைய கிணற்றில் குளிக்கச் சென்றனர்.
நீச்சல் தெரியாததால் பிரவீன் கிணற்றின் அருகிலேயே கரையில் நின்றார். மற்ற இருவரும் குளிக்க கிணற்றில் இறங்கிய போது, எதிர்பாராமல் முத்துக் கிருஷ்ணன் தண்ணீரில் மூழ்கினார்.
அவரை காப்பாற்ற முயன்ற அரவிந்தும் கிணற்றில் மூழ்கினார். பலியான இருவரது உடலையும் நிலக்கோட்டை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். அம்மையநாயக்கனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

