ADDED : ஆக 02, 2025 07:29 AM

புதுச்சேரி : ரூ.1 கோடி கேட்டு போலீஸ் இன்ஸ்பெக்டரை மிரட்டிய வழக்கில் தலைமறைவாக உள்ள த.வா.க., மாநில பொறுப்பாளரை இரு தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
தமிழக வாழ்வுரிமை கட்சியின் புதுச்சேரி மாநில பொறுப்பாளர் ஸ்ரீதர், புதுச்சேரி போக்குவரத்து பிரிவு எஸ்.பி., மீது ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற, ரூ. 1 கோடி பணம் கேட்டு பேரம் பேசினார்.
இதுதொடர்பாக அக்கட்சியின் சமூக ஊடக நிர்வாகி பாபு, நேற்று முன்தினம் ஒதியஞ்சாலை போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று, அங்கு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரிடம், எஸ்.பி.,யிடம் பணத்தை வாங்கி தருமாறு மிரட்டினார்.
இதுகுறித்த இன்ஸ்பெக்டர் அளித்த புகாரின் பேரில் த.வா.க., நிர்வாகிகள் பாபு மற்றும் ஸ்ரீதர் ஆகியோர் மீது சப் இன்ஸ்பெக்டர் ராஜன் வழக்கு பதிந்து, பாபுவை கைது செய்தனர்.
அவரை விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்று நேற்று மதியம் புதுச்சேரி ஜே.எம்.2 கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும், இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள ஸ்ரீதரை இரு தனிப்படை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

