குமரிக்கு டூவீலரில் சுற்றுலா சென்றவர் விபத்தில் பலி
குமரிக்கு டூவீலரில் சுற்றுலா சென்றவர் விபத்தில் பலி
ADDED : ஜன 09, 2024 02:41 AM
திருநெல்வேலி: சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு டூவீலரில் சுற்றுலா சென்ற வாலிபர் தடுப்பு சுவரில் மோதி பலத்த காயமுற்று பலியானார். டூவீலரில் சரக்கு ஆட்டோ மோதியதில் இரு வாகனங்களுக்கும் தீப்பற்றி எரிந்தன.
சென்னை அருகே ஈஞ்சம்பாக்கம் ராமலிங்கநகரைச் சேர்ந்த கன்னியப்பன் மகன் நிஷாந்த் 28. அவரது நண்பர்கள் அருண்குமார் 22, ராஜபாண்டியன் 47. மூவரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். விடுமுறைக்காக சென்னையிலிருந்து இரு டூவீலர்களில் கன்னியாகுமரி நோக்கி சென்றனர். நிஷாந்த் ஒரு டூவீலரிலும், மற்ற இருவரும் மற்றொரு டூவீலரிலும் சென்றனர்.கன்னியாகுமரியில் சூரிய உதயம் காண வேகமாக சென்றனர். நேற்று முன்தினம் அதிகாலை 4:30 மணியளவில் திருநெல்வேலி கே.டி.சி.நகர் பகுதியில் நான்கு வழிச்சாலை மேம்பாலத்தில் சென்றபோது அருண்குமார், ராஜபாண்டியன் சென்ற டூவீலர் முன்னதாக சென்றது. தனியாக வந்த நிஷாந்த் டூவீலர் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளாகி ரோட்டில் விழுந்தார்.
ரோட்டில் கிடந்த விபத்துக்குள்ளான டூவீலர் மீது பின்னால் சென்ற சரக்கு ஆட்டோ மோதி சிறு தூரம் இழுத்துச் சென்றது. இதில் டூவீலர் தீப்பற்றி பின் சரக்கு ஆட்டோவும் தீப்பற்றி எரிந்தன. ஆட்டோவை ஓட்டிய தொட்டியத்தைச் சேர்ந்த வடிவேலு இறங்கியதால் உயிர் தப்பினார். பலத்த காயமுற்ற நிஷாந்த் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் நேற்று காலை பரிதாபமாக இறந்தார். போக்குவரத்து போலீசார் விசாரித்தனர்.