அ.தி.மு.க.,வுடன் த.வெ.க., தே.மு.தி.க., பா.ம.க., கூட்டணி: தை பிறந்தால் வழி பிறக்கும் என்கிறார் உதயகுமார்
அ.தி.மு.க.,வுடன் த.வெ.க., தே.மு.தி.க., பா.ம.க., கூட்டணி: தை பிறந்தால் வழி பிறக்கும் என்கிறார் உதயகுமார்
ADDED : நவ 08, 2025 02:07 AM
மதுரை: ''தி.மு.க.,வை எதிர்க்கும் த.வெ.க., தே.மு.தி.க., பா.ம.க., அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க வேண்டும். தை பிறந்தால் வழி பிறக்கும். த.வெ.க., தலைவர் விஜய் தன் தொண்டர்களை உற்சாகப்படுத்த தி.மு.க., - த.வெ.க., இடையே தான் போட்டி என்கிறார்,'' என, மதுரையில் அ.தி.மு.க., சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் 10 ஆண்டுகள் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டவர் அ.ம.மு.க., பொதுச்செயலாளர் தினகரன். என் முகத்தில் விழிக்கக்கூடாது என ஜெ., உத்தரவிட்டார். அதனால் தமிழகத்திற்கு வராமல் புதுச்சேரியில் பதுங்கி இருந்தார். ஒருவரை ஜெ., தகுதி நீக்கம் செய்கிறார் என்றால், அது ஆண்டவனே செய்ததற்கு அர்த்தம். அ.தி.மு.க.,வை வெற்றிப்பாதையில் கொண்டு செல்லும் பழனிசாமி மீதும் அவதுாறு பரப்புவதையே தினகரன் வேலையாக கொண்டிருக்கிறார். தினகரனை நம்பி சென்ற 18 எம்.எல்.ஏ.,க்கள் இன்று அரசியல் அனாதைகளாக இருக்கிறார்கள்.
ஜெ., மறைவிற்கு பின்பு ஆட்சியையும், கட்சியையும் அபகரிக்க திட்டம் போட்டார்கள். பழனிசாமியிடம் பருப்பு வேகவில்லை. கட்சியை தினகரன் 'ஆட்டையை' போட நினைத்தார். அது நிகழாததால் விரக்தியில் வாய்க்கு வந்ததை பேசிக் கொண்டிருக்கிறார்.
பழனிசாமி மீது ஏன் கோடநாடு குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்கிறார். இதுகுறித்து சட்டசபையில் நீண்ட விவாதம் நடந்துள்ளது. நீங்கள் சட்டசபை செல்லவில்லை. அதனால் உங்களுக்கு தெரியவில்லை.
மீண்டும் சிறையில் தினகரன் 'போயஸ் கார்டனில் எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள் குறித்து கடிதம் இருந்தது. அதை நான் கிழித்து விட்டேன்' என்று தினகரன் கூறுகிறார். இப்படி ஒரு கீழ்த்தரமான சிறுமையான அரசியல் செய்து வெறும் வாயில் அவலை மெல்லுகிறார்.
பொதுவெளியில் எதை வேண்டுமானாலும் பேசலாமா. இவருக்கு என்ன தான் பிரச்னை என்று தெரியவில்லை. அ.ம.மு.க.,வை துவங்கும் போது எவ்வளவு பேர் உங்களுக்கு தோள் கொடுத்து நின்றார்கள். அவர்களில் எவ்வளவு பேரை எம்.எல்.ஏ.,வாக்கினீர்கள். தேர்தலில் மக்கள் உங்களை நிராகரித்து விட்டனர். உங்களைப் போன்ற கொசுக்கடியை தாங்க முடியவில்லை. 'நானும் ரவுடிதான்' என்பது போல தினகரன் பரிதாப நிலைக்கு சென்று விட்டார்.
உங்களை ஜெ., எதற்காக நீக்கினார்கள் என்று கூறுங்கள். அதுக்குரிய ஆவணத்தை எல்லாம் நீங்கள் கிழித்து விட்டீர்களா. தினகரன் மீது பெரா வழக்கு உள்ளது. எப்போது வேண்டுமானாலும் சிறைக்கு செல்லலாம்.
தி.மு.க.,வை எதிர்க்கும் த.வெ.க., தே.மு.தி.க., பா.ம.க., அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க வேண்டும். தை பிறந்தால் வழி பிறக்கும். எல்லா கட்சி தலைவர்கள் போல் விஜயும் தன் தொண்டர்களை உற்சாகப்படுத்த தி.மு.க., - த.வெ.க., இடையே தான் போட்டி என்கிறார். விஜய்க்காக நாங்கள் சட்டசபையில் பேசியதற்காக அவர் எங்களுக்கு நன்றி சொல்லாவிட்டாலும் பரவாயில்லை. நாங்கள் நல்லதை செய்து கொண்டே இருப்போம். நிச்சயமாக பழனிசாமி தலைமையில் மெகா கூட்டணி அமைப்போம். இவ்வாறு கூறினார்.

