உயர்கல்வி நிறுவனங்களில் மேலும் ஒரு மொழி கற்பிப்பு யு.ஜி.சி., அறிவுறுத்தல்
உயர்கல்வி நிறுவனங்களில் மேலும் ஒரு மொழி கற்பிப்பு யு.ஜி.சி., அறிவுறுத்தல்
ADDED : டிச 07, 2025 01:52 AM

சென்னை: 'உயர்கல்வி நிறுவனங்களில், மேலும் ஒரு இந்திய மொழி கற்போம் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்' என, யு.ஜி.சி., அறிவுறுத்தி உள்ளது.
இதுதொடர்பாக, யு.ஜி.சி., எனும், பல்கலை மானியக் குழு செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி வெளியிட்டுள்ள அறிக்கை:
ஆங்கில ஆதிக்க கல்வி கட்டமைப்பில் இருந்து, பாரதிய மொழி கற்றல் சுற்றுச்சூழல் அமைப்பை நோக்கி, பாரதம் நகர்கிறது. உள்ளூர் மொழிகளுக்கான குரல் தற்போது ஒலிக்க துவங்கி உள்ளது.
'வளர்ச்சியடைந்த பாரதம் - 2047' எனும் இலக்கை அடைய, இந்திய மொழிகளை புரிந்துக் கொள்ளும் இளைஞர்கள் தேவை அதிகம்.
இந்திய மொழிகள் குறித்த அறிவு மாணவர்களிடையே இருந்தால், எதிர்காலத்தில் எங்கும் வேலைவாய்ப்புகளை பெற உதவும்.
உயர் கல்வி நிறுவனங்களுக்கு, இந்திய மொழிகள் குறித்த படிப்புகளை, 'கிரெடிட் கோர்ஸ்' வாயிலாக வழங்கி, மாணவர்கள் கற்க ஊக்குவிக்க வேண்டும்.
மேலும், ஒரு இந்திய மொழி கற்பது, பெருமையாகவும், கவுரவமாகவும் கருதப்பட வேண்டும். தாய்மொழிக்கு அடுத்தபடியாக, மேலும் ஒரு இந்திய மொழியை மாணவ, மாணவியர் கற்க வேண்டும்.
அனைத்து கல்வி நிறுவனங்களும், குறைந்தது மூன்று இந்திய மொழிகளை கற்பிக்கலாம். ஒரு உள்ளூர் மொழி, அடுத்ததாக, பட்டியலிடப்பட்டுள்ள 22 இந்திய மொழிகளில் ஏதேனும் இரண்டு மொழிகளை கற்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

