sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 07, 2025 ,கார்த்திகை 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 கலை எழுச்சிக்கு சான்றாகும் வெங்கனுார் தான்தோன்றீஸ்வரர் கோவில் புனரமைத்து பாதுகாக்க முன்வருமா தமிழக அரசு?

/

 கலை எழுச்சிக்கு சான்றாகும் வெங்கனுார் தான்தோன்றீஸ்வரர் கோவில் புனரமைத்து பாதுகாக்க முன்வருமா தமிழக அரசு?

 கலை எழுச்சிக்கு சான்றாகும் வெங்கனுார் தான்தோன்றீஸ்வரர் கோவில் புனரமைத்து பாதுகாக்க முன்வருமா தமிழக அரசு?

 கலை எழுச்சிக்கு சான்றாகும் வெங்கனுார் தான்தோன்றீஸ்வரர் கோவில் புனரமைத்து பாதுகாக்க முன்வருமா தமிழக அரசு?


ADDED : டிச 07, 2025 01:52 AM

Google News

ADDED : டிச 07, 2025 01:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: நாயக்கர்களின் கலை எழுச்சிக்கு சான்றாக விளங்கும் வெங்கனுார் தான்தோன்றீஸ்வரர் சிவன் கோவிலில் உள்ள சிற்ப துாண்கள், சுவர் ஓவியங்கள் சிதிலமடைந்து, அழியக்கூடிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.

அவற்றை மரபு வழியில் புனரமைத்து பாதுகாக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழர் கலை வரலாற்றின் தொன்மப் பகுதியாக, பெரம்பலுார் வட்டார கோவில்கள் திகழ்கின்றன. குறிப்பாக, வெங்கனுார் தான்தோன்றீஸ்வரர் சிவன் கோவில், சோழர்களின் கலை பரவலாக்கத்திற்கும், நாயக்கர்களின் கலை எழுச்சிக்கும் சான்றாக உள்ளது.

பாதுகாக்க வேண்டும் அந்த வகையில், பெரம்பலுார் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகாவில், வெங்கனுார் என்ற ஊரில் தான்தோன்றீஸ்வரர் சிவன் கோவில் உள்ளது.

அங்கு மண்ணில் புதைந்து கிடைத்த தான் தோன்றி லிங்கம் வாயிலாக, அது நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட பழமைவாய்ந்த கோவில் என அறிய முடிந்தது.

அக்கோவில், தற்போது காலத்தால் அழிந்து வருகிறது. கோவிலில் கிடைத்த கல்வெட்டுகளின்படி, இத்தலம் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. விஜயநகர மன்னர் வெங்கடபதி தேவர் மகாராயர் காலத்தில் கட்டப்பட்டுள்ளது.

மிகுந்த கலை வேலைப்பாடு கொண்ட இக்கோவில், 'சுத்த வேசரம்' எனும் பாணியில் கட்டப்பட்டுள்ளது. இதுபோல், தமிழகத்தில் வெகுசில மட்டுமே உள்ளன. 'கஜபிருஷ்ட' அமைப்பில் கட்டப்பட்ட இக்கோவிலின் கருவறை மிகவும் அரிதானது.

கோவில் கருவறையைச் சுற்றிலும், புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கோவில் துண்களில், நாயக்கர் கால கட்டடக் கலைக்கு பெயர்போன மகர யாழிகள், போர் குதிரை சிற்பங்கள், பறவைகள், இலை, செடி, பூக்களும் காணக் கிடைக்கின்றன.

இக்கோவில் சுற்றுப்பாதை, பெரியம்மை நாச்சியார் சன்னிதி மற்றும் வசந்த மண்டபத்தில் உள்ள சுவர் ஓவியங்கள், நாயக்கர் கால ஓவியங்கள், மராட்டியர் கால ஓவியங்கள் மற்றும் சமகால ஓவியங்கள் என, மூன்று காலகட்டங்களில் வரையப்பட்டுள்ளன.

கோவில் சிற்பத் துாண்களை தட்டினால், வெண்கல சத்தம் கேட்கும். அதனால் தான், இந்த ஊருக்கு வெங்கனுார் என பெயர் உருவாகியுள்ளது. தற்போது, இந்த துாண்களில் சுண்ணாம்பு பூசப்பட்டு, சிற்பங்கள் அனைத்தும் தெளிவின்றி காணப்படுகின்றன.

எனவே, சிற்பத் துாண்களை துாய்மை செய்ய வேண்டும். பல சிற்பங்கள் எண்ணெய் குளியல் செய்யப்பட்டு, தேய்மானம் அடைந்துள்ளன. அந்த வகை சிற்பங்களையும் துாய்மை செய்து பாதுகாக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

நுண்ணிய வேலைப்பாடு இதுகுறித்து, இக்கோவிலை ஆய்வு செய்த சென்னை அரசு கவின் கலை கல்லுாரி பதிப்பு ஓவியத்துறை தலைவர் கு.கவிமணி கூறியதாவது:

தமிழகத்தில் கோவில் கலை என்றால், தஞ்சை என்ற பொது சிந்தனை உள்ளது. சோழர்களின் வரலாற்றில் மிகுதியாக பேசப்படுவது, தஞ்சை மண்டலம் மட்டுமே. எஞ்சிய பிற பகுதிகள் குறித்த ஆய்வுகள் முழுமையாக செய்யப்படாததன் வெறுமையை, வெங்கனுார் ஆய்வு புலப்படுத்துகிறது.

பெரம்பலுார், சேலம் மாவட்டங்களில் பல கோவில்கள் நுண்ணிய கலை வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்டுள்ளன. ஆனால், அவை தற்போது காலத்தால் அழிந்து, சிதிலமடைந்து காணப்படுகின்றன.

வரலாறு சிறப்பு பெற்ற வெங்கனுார் தான்தோன்றீஸ்வரர் சிவன் கோவிலை, மரபு வழியில் புனரமைத்து பாதுகாக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுப்பதோடு, இதுபோன்ற புராதன நினைவு சின்னங்களை பராமரிக்கும் வகையில், மாவட்டந்தோறும், பாரம்பரிய மேலாண்மை சிறப்பு குழு அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us