கல்லுாரி மாணவர் விபரங்களை பதிவேற்ற முடியாமல் தவிப்பு
கல்லுாரி மாணவர் விபரங்களை பதிவேற்ற முடியாமல் தவிப்பு
ADDED : அக் 03, 2024 02:59 AM
தேனி:கல்லுாரி மாணவர்களின் விபரங்களை 'யூமிஸ்' தளத்தில் பதிவேற்ற அரசு அறிவுறுத்தி உள்ளது. ஆனால், இந்த தளம் சரிவர செயல்படாததால் பதிவேற்றம் செய்ய முடியாமல் தவிப்பதாக கல்லுாரி நிர்வாகங்கள் புலம்புகின்றன.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் விபரங்கள் எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. பள்ளி படிப்பு முடித்து, கல்லுாரிகள், பாலிடெக்னிக், ஐ.டி.ஐ.,களில் படிக்கும் மாணவர்களின் விபரங்களை 'யூமிஸ்' தளத்தில் பதிவேற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மாணவர்களின் ஆதார் எண், அலைபேசி எண், எமிஸ் எண், பள்ளி சான்றிதழ்கள் எண் உள்ளிட்டவை பதிவேற்றப்படுகிறது. வெளி மாநில மாணவர்கள் என்றால் 'எமிஸ்' எண் பதிவேற்றப்படுவது இல்லை.
பதிவேற்றம் செய்யும் போது மாணவர்கள் வழங்கும் கைபேசி எண்ணிற்கு ஓ.டி.பி., அனுப்பப்பட்டு உறுதி செய்யப்படுகிறது. இந்த கல்வியாண்டு துவங்கியதில் இருந்து யூமிஸ் தளம் பெரும்பாலான நேரங்களில் முடங்கியே உள்ளது. இதனால் விபரங்களை பதிவிடுவதில் சிரமம் நிலவுவதாக கல்லுாரி நிர்வாகங்கள் கூறுகின்றன.
மேலும், மாணவர்கள் பலரது ஆதார் புதுப்பிக்கப் படாததாலும், ஆதார் உடன் வங்கி கணக்கு இணைக்கப் படாததாலும் பதிவு செய்தாலும், மீண்டும் பதிவு செய்யும் நிலை உள்ளதாக அலுவலர்கள் புலம்புகின்றனர்.