பிரதமரின் வேலைவாய்ப்பு பெருக்க திட்டத்தின் கீழ் வழங்கப்படாத மானியம்: எதிர்பார்த்து காத்திருக்கும் தொழில்முனைவோர்
பிரதமரின் வேலைவாய்ப்பு பெருக்க திட்டத்தின் கீழ் வழங்கப்படாத மானியம்: எதிர்பார்த்து காத்திருக்கும் தொழில்முனைவோர்
ADDED : மார் 16, 2025 12:53 AM

மதுரை: பிரதமரின் வேலைவாய்ப்பு பெருக்க திட்டத்தின் கீழ் இரண்டாண்டுகளாக தொழில் முனைவோர்களுக்கு மானியம் வழங்கப்படவில்லை.
இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி தொழில் துவங்க, 10 லட்சம் ரூபாய், சேவை தொழில்களுக்கு, 5 லட்சம் ரூபாய் வரை கடன் பெற கல்வித்தகுதி தேவையில்லை. 8ம் வகுப்பிற்கு மேல் தேர்ச்சி பெற்ற, 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் உற்பத்தி தொழில் துவங்கினால், 50 லட்சம் ரூபாய் வரையும், சேவை தொழில்களுக்கு, 20 லட்சம் ரூபாய் வரையும் கடன் பெறலாம்.
நகர்ப்புறத்தில் தொழில் துவங்கும் பொதுப்பிரிவினருக்கு, 15 சதவீதம், கிராமப்புறத்தில் துவங்கினால், 25 சதவீத மானியம் வழங்கப்படும்.
பெண்கள், இதர பிற்படுத்தப்பட்டோர், எஸ்.சி., -- எஸ்.டி., சிறுபான்மையினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் நகர்ப்புறத்தில் தொழில் துவங்கினால், 25 சதவீதம், கிராமப்புறத்தில் துவங்கினால், 35 சதவீதம் மானியம் வழங்கப்படும்.
வங்கிக்கடன் பெறும் போது, அதற்கான திட்ட மதிப்பீட்டில் பொதுப்பிரிவினராக இருந்தால், 10 சதவீதம், சிறப்பு பிரிவினர், 5 சதவீதம் சுயமுதலீடு செய்ய வேண்டும்.
தமிழகத்தில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் இத்திட்டத்தின் கீழ் தொழில் துவங்கி வெற்றி பெறுகின்றனர்.
வங்கியில் பெற்ற கடனை, 3 முதல் 7 ஆண்டுகள் வரை திரும்ப செலுத்தலாம். இவர்களுக்கான தொழில் முதலீட்டு மானியத்தை, மத்திய அரசு இவர்களின் வங்கிக்கணக்கில் வரவு வைத்து விடும்.
கடன் முடியும் தருவாயில் மீதமுள்ள கடன் தொகைக்கு ஏற்ப மானியம் கழிக்கப்பட்டு கடன் முடித்து வைக்கப்படும். 2023 - 24, 2024 - 25க்கான மானியத்தை எதிர்பார்த்து தமிழக அளவில் ஆயிரக்கணக்கான தொழில்முனைவோர் காத்திருக்கின்றனர்.
அதுமட்டுமின்றி, மத்திய அரசு மானியம் வழங்கிய பிறகே, கடன்தொகை முழுதையும் சரிசெய்து கணக்கை முடித்து வைக்க முடியும்.
மானியத்தொகை கிடைக்கும் வரை தொழில்முனைவோர் சிறிய தொகையாவது வங்கிகளுக்கு செலுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.
தொழில் துவங்கி நேர்மையாக கடனை திரும்பி செலுத்தியவர்கள், கடனை முடிக்க முடியாமல் திணறுகின்றனர். தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பி.எம்.இ.ஜி.பி., கடன் பெற்றவர்களுக்கான, 100 கோடி ரூபாய் வரையான மானியத்தொகை விடுவிக்கப்படவில்லை.
தமிழக அரசு இவர்களுக்கான மானியத்தை பெற்றுத்தர ஏற்பாடு செய்ய வேண்டும்.

