புதிய மருத்துவ கல்லுாரிகளுக்கு தடையில்லா சான்று வினியோகம்
புதிய மருத்துவ கல்லுாரிகளுக்கு தடையில்லா சான்று வினியோகம்
ADDED : அக் 11, 2025 11:39 PM
விருதுநகர்:தமிழகத்தில் புதிதாக திறக்கப்பட்ட, 11 அரசு மருத்துவ கல்லுாரிகளுக்கு, தடையில்லா சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
தமிழகத்தில் புதிதாக திறக்கப்பட்ட, 11 அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளின் பணிகள் துவங்க மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் தடையில்லா சான்றிதழ், பணிகள் முடிவடைந்த பின், பொதுப்பணித்துறை ஆய்வு செய்து, பணிகள் முழுமை பெற்றதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
அரசு மருத்துவ கல்லுாரிகளில் கட்டுமான பணிகளை செய்த நிறுவனம், பணிகளை முறையாக முடித்ததால் அனைத்து தடையில்லா சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. ஆனால், அரசு மருத்துவமனைகளில் பணிகளை செய்த ஒப்பந்த நிறுவனம் பணிகளை முடிக்காமல், அவசர கதியில் திறக்கப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
இக்கட்டடங்களை பொதுப்பணித்துறை ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கவில்லை. தீயணைப்பு, நகராட்சி, மாநகராட்சியால் வழங்கப்படும் எந்த சான்றிதழ்களும் இல்லாமல், மூன்று ஆண்டுகளை கடந்து, 11 புதிய அரசு மருத்துவமனைகளும் இயங்கி வந்தன.
இதுகுறித்து மே, 28ல் நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, மாசுகட்டுப்பாட்டு வாரியம், பொதுப்பணி, தீயணைப்பு, நகராட்சி, மாநகராட்சி அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டு, அனைத்து தடையில்லா சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் ஒரு புதிய மருத்துவ கல்லுாரிக்கு தலா, 24 முதுநிலை மருத்துவ படிப்பிற்கான இடங்கள் துவங்க, தேசிய மருத்துவ ஆணையமும் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனால் அடுத்தாண்டு முதல் முதுநிலை மருத்துவப்படிப்பு சேர்க்கையும் துவங்கவுள்ளது.