மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் மோடி - ஸ்டாலின் சந்திப்பை அடுத்து முடிவு
மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் மோடி - ஸ்டாலின் சந்திப்பை அடுத்து முடிவு
ADDED : அக் 04, 2024 12:12 AM
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மூன்று வழித்தடங்களில், 128 ரயில் நிலையங்களுடன், 118.9 கி.மீ., துாரத்துக்கு அமைய உள்ள இந்த இரண்டாம் கட்டப் பணிகளை, 63,246 கோடி ரூபாய் செலவில் நிறைவேற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்தின் பல்வேறு திட்டங்கள் குறித்து அவர் வலியுறுத்தினார். குறிப்பாக, சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகளுக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தினார்.
மேலும், முதல் கட்டத்தை போலவே, இரண்டாம் கட்டத்தையும், 50:50 விகிதத்தில் மத்திய, மாநில அரசுகள் நிதியுதவியுடன் செயல்படுத்த, அவர் பிரதமரிடம் கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு, பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது குறித்து, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:
மத்திய அரசின் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் பரிந்துரையை ஏற்று, சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இது, சென்னையின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் முக்கியமான திட்டமாகும். சென்னையில் மெட்ரோ ரயில் சேவையின் மிகப் பெரும் விரிவாக்கமாகவும் இருக்கும்.
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள், 63,246 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்படும். வரும், 2027க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்டப் பணிகள் முடிந்து, அது நடைமுறைக்கு வரும் போது, சென்னையின் மொத்த மெட்ரோ ரயில் இணைப்பு துாரம், 173 கி.மீ.,யாக இருக்கும்.
இந்த திட்டம் சென்னையின் வளர்ச்சியில் ஒட்டு மொத்த பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.
மிக துரிதமான இணைப்பு, போக்குவரத்து நெரிசல் குறைப்பு, சுற்றுச்சூழல் பலன்கள், பொருளாதார வளர்ச்சி, மக்களின் வாழ்க்கை தரம் உயருதல் என, பல பலன்களை அளிக்கும்.
மேலும், நகர்ப்புற வளர்ச்சி சவால்களுக்கு பதிலளிக்கும் வகையிலும், எதிர்கால தேவைக்கேற்ப புறநகர் பகுதிகளை இணைக்கவும், இந்த திட்டம் முக்கிய கருவியாக இருக்கும்.
இரண்டாம் கட்டத்தில், 118.9 கி.மீ., துார பாதைகள் அமைக்கப்படுவதன் வாயிலாக, சென்னையில் பொது போக்குவரத்து வசதிகள் அதிகரிக்கும். இது, சென்னையின் வடக்கு - தெற்கு, கிழக்கு - மேற்கை இணைக்கும் வகையில் முக்கிய திட்டமாக அமைய உள்ளது.
தொழிற்பேட்டைகள், வணிக வளாகங்கள், குடியிருப்பு பகுதிகள், கல்வி நிறுவனங்கள் என, அனைத்து துறைகளையும் இணைக்கும் வகையில், நகரின் முக்கிய பொது போக்குவரத்து வசதியாக சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டம் அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது சிறப்பு நிருபர் -