யூனிட் மின்சார வரவு, செலவு இடைவெளி நான்கு காசுகளாக குறைந்தது
யூனிட் மின்சார வரவு, செலவு இடைவெளி நான்கு காசுகளாக குறைந்தது
ADDED : டிச 11, 2025 03:53 AM

சென்னை: கடந்த, 2024 - 25ல் தமிழக மின் வாரியத்தின், ஒரு யூனிட் மின்சாரத்துக்கான சராசரி வருவாய் மற்றும் சராசரி செலவுக்கான இடைவெளி, 4 காசாக குறைந்துள்ளது.
தமிழக மின் வாரியத்தின் துணை நிறுவனமான, மின் பகிர்மான கழகம், மாநிலம் முழுதும், அனைத்து பிரிவுகளுக்கும் மின் வினியோகம் செய்கிறது.
வீடுகளுக்கு, 100 யூனிட் மின்சாரம் இலவசமாகவும், 500 யூனிட் வரை மானிய விலையிலும் மின்சாரம் வழங்கப்படுகிறது.
தொழிற்சாலை, வணிகம் உட்பட ஒவ்வொரு பிரிவுக்கும், தனித்தனி மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
கடந்த, 2024 - 25ல் ஒரு யூனிட் மின்சாரம் வாயிலாக கிடைத்த, சராசரி வருவாய், 10.37 ரூபாயாகவும், சராசரி செலவு, 10.41 ரூபாயாகவும் இருந்துள்ளது.
இதையடுத்து, அந்த ஆண்டில் மின்சார விற்பனைக்கும், மின்சார செலவுக்கும் இடையிலான இடைவெளி, 4 காசு என்றளவில் உள்ளது.
இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் இருந்து, 2023 - 24ல் மின் பகிர்மான கழகம், தனி நிறுவனமாக பிரிக்கப்பட்டது.
அந்த ஆண்டில், யூனிட் மின்சார சராசரி வருவாய், சராசரி செலவு இடைவெளி, 8 காசாக இருந்தது.
இது, மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமாக, ஒரே நிறுவனமாக இருந்த போது, 47 காசாக அதிகரித்து காணப்பட்டது.
கடந்த நிதியாண்டில், மின் கட்டணம் உயர்த்தப்பட்டதுடன், மின் சாதனங்கள் கொள்முதல் செலவு குறைப்பு உள்ளிட்ட காரணங்களால், மின்சார வருவாய், செலவுக்கான இடைவெளி குறைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

