ADDED : ஆக 30, 2025 06:50 AM

திருநெல்வேலி : திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை வளாகத்தில் டூவீலர் பார்க்கிங் தொடர்பாக மாணவர்கள் ஜாதி ரீதியாக மோதிக்கொண்டதில் இருவர் காயமுற்றனர். பல்கலைக்கு விடுமுறை விடப்பட்டது. 3 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை வளாகம் அபிஷேகப்பட்டியில் உள்ளது. மாணவர்கள் டூவீலரில் பல்கலை வளாகத்தில் வேகமாக சுற்றித் திரிவதால் பல்கலை நுழைவாயில் அருகில் அனைத்து மாணவர்களுக்கும் டூவீலர் பார்க்கிங் வசதி உள்ளது. வரலாற்று துறை முதலாம் ஆண்டு மாணவர் ஒருவர் நேற்று முன்தினம் டூவீலரை வாகன நிறுத்தத்தில் நிறுத்தாமல் நிறுத்தாமல் கேண்டீன் அருகில் ஓட்டியுள்ளார்.
இரண்டாம் ஆண்டு மாணவர் முத்துஅருள் செல்வம், நீ எப்படி டூவீலரை இங்கு கொண்டு வந்தாய் என கேட்டுள்ளார். இதில் வாக்குவாதம் ஏற்பட்டது. முதலாம் ஆண்டு மாணவனுக்கு ஆதரவாக வந்த இரண்டாம் ஆண்டு மாணவர் லட்சுமி நாராயணனுக்கும் முத்து அருள் செல்வத்திற்கும் மோதல் ஏற்பட்டது. இருவரும் காயமுற்றனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் ஜாதி மோதலாக மாறியது.
லட்சுமி நாராயணனை தாக்கியதாக முத்து அருள் செல்வம், சுந்தர் ஜான், மதார் பக்கீர் ஆகிய மூன்று மாணவர்களையும் வன்கொடுமை வழக்கில் போலீசார் கைது செய்தனர். பல்கலைக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.

