பயன்படுத்தாமல் தேங்கிய உயிர் உரங்கள்; மீண்டும் ரூ.1.98 கோடிக்கு வாங்க முடிவு
பயன்படுத்தாமல் தேங்கிய உயிர் உரங்கள்; மீண்டும் ரூ.1.98 கோடிக்கு வாங்க முடிவு
ADDED : டிச 30, 2025 06:31 AM

சென்னை: அதிக விலை கொடுத்து வாங்கிய உயிர் உரங்கள் ஏற்கனவே தேக்கம் அடைந்துள்ள நிலையில், மீண்டும் 1.98 கோடி ரூபாய்க்கு உயிர் உரங்களை தனியாரிடம் வேளாண் துறை கொள்முதல் செய்ய உள்ளது.
பயிர்களுக்கு தேவையான பாஸ்பரஸ், நைட்ரஜன் உள்ளிட்ட சத்துக்களை, மண்ணில் இருந்து எடுத்து வழங்கும் பணியை உயிர் உரங்கள் செய்கின்றன. இவை, திட மற்றும் திரவ வடிவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இவற்றை தயாரிப்பதற்கு, ஒவ்வொரு மாவட்டத்திலும் திட மற்றும் திரவ உயிர் உரங்கள் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு உயிர் உர உற்பத்தி நிலையம் அமைப்பதற்கும், அரசால் 30 லட்சம் ரூபாய் வரை செலவழிக்கப்பட்டு, கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளன.
அவற்றில், கடந்த நான்கு ஆண்டுகளாக உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால், வாங்கிய இயந்திரங்கள் வீணடிக்கப்பட்டு உள்ளன. அதற்கு பதிலாக, தனியார் ஏஜன்சிகள் வாயிலாக, உயிர் உரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்ட விவசாயிகளின் தேவைக்கு, 1.98 கோடி ரூபாய்க்கு திரவ மற்றும் திட உயிர் உரங்களை கொள்முதல் செய்யும் பணிகளை, வேளாண் துறை துவங்கியுள்ளது. மேலும், பல மாவட்டங்களுக்கு, 80 கோடி ரூபாய்க்கு உயிர் உரங்கள் வாங்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, வேளாண் துறை வட்டாரத்தில் கூறப்படுவதாவது:
வேளாண் துறை வாயிலாக, தரமான உயிர் உரங்கள் தயாரித்து, குறைந்த விலையில் வழங்கப்பட்டன. தற்போது, தனியாரிடம் இருந்து தரமற்ற உயிர் உரங்களை அதிக விலைக்கு வாங்கி, மானிய விலையில் விற்கப்படுகின்றன.
இவை தரமற்றவையாக இருப்பதால், விவசாயிகள் ஆர்வம் காட்டுவதில்லை. பல்வேறு திட்டங்களில் இணைப்பு பொருளாக வழங்கப்படும் உயிர் உரங்களையும், விவசாயிகள் எடுத்துச் செல்வதில்லை. கையெழுத்து மட்டும் போட்டு விட்டு செல்கின்றனர்.
இதனால், அவை தேக்கம் அடைந்துள்ளன. இந்நிலையில், தனியாரிடம் இருந்து அவை மீண்டும் வாங்கப்படுகின்றன. இதன் வாயிலாக, வேளாண் துறையின் உயிர் உர உற்பத்தி நிலையங்களுக்கு மூடுவிழா நடத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

