ஐ.ஐ.டி., மாணவிக்கு பாலியல் தொந்தரவு: உ.பி., வாலிபர் கைது
ஐ.ஐ.டி., மாணவிக்கு பாலியல் தொந்தரவு: உ.பி., வாலிபர் கைது
ADDED : ஜன 16, 2025 12:26 AM

சென்னை : சென்னை ஐ.ஐ.டி.,யில், ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் மாணவிக்கு, பாலியல் தொந்தரவு கொடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
கேரளாவை சேர்ந்த 30 வயது பெண், சென்னை ஐ.ஐ.டி., விடுதியில் தங்கி, ஆராய்ச்சி படிப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை, ஐ.ஐ.டி., அருகே ஸ்ரீராம் நகரில் உள்ள டீக்கடைக்கு தன் நண்பருடன் சென்றார்.
அப்போது, மது போதையில் கருப்பு நிற டீ ஷர்ட் அணிந்து வந்த நபர், அவரிடம் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். உடனே மாணவி கூச்சலிட்டதால், பொதுமக்கள் திரண்டு வாலிபரை மடக்கி பிடித்தனர். கோட்டூர்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மாணவியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டவரை, காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில், உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீராம்,31, என தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
சம்பவம் குறித்து ஐ.ஐ.டி., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இச்சம்பவம் ஐ.ஐ.டி., வளாகத்திற்கு வெளியில் நடந்துள்ளது. மாணவியுடன் சென்ற மாணவர், சம்பவம் நடந்த உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். பாலியல் தொந்தரவில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவருக்கும், ஐ.ஐ.டி.,க்கும் எந்தவித தொடர்பும் இல்லை.
ஐ.ஐ.டி., வளாகத்தில் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வளாகத்தை சுற்றி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
மாணவியர் பாதுகாப்பு தொடர்பாக, ஐ.ஐ.டி., நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மாணவியர் வெளியே செல்லும் போது முன்னெச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.