சூரியசக்தி மின்சாரத்தை பேட்டரியில் சேமித்து இரவில் வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்தல்
சூரியசக்தி மின்சாரத்தை பேட்டரியில் சேமித்து இரவில் வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்தல்
ADDED : செப் 27, 2024 01:50 AM
சென்னை:தமிழகத்தில் உற்பத்தியாகும் சூரியசக்தி மின்சாரத்தை, 'பேட்டரி ஸ்டோரேஜ்' தொழில்நுட்பத்தில் சேமித்து வைத்து இரவில் வழங்கும்படி, மத்திய அரசின் சோலார் எனர்ஜி கார்ப்பரேஷனிடம், மின் வாரியம் வலியுறுத்திஉள்ளது.
தமிழகத்தில் ஆண்டுக்கு, 300 நாட்களுக்கு மேலாக சூரியசக்தி மின்சாரம் கிடைக்கும் சாதகமான வானிலை நிலவுகிறது.
'கன்டெய்னர்'
எனவே, தனியார் நிறுவனங்கள் சொந்த மின் பயன்பாட்டிற்கும், மின்வாரியத்திற்கு விற்கவும் சூரியசக்தி மின் நிலையங்கள் அமைத்து வருகின்றன.
தற்போதைய நிலவரப்படி நிலத்தில், 8,150 மெகாவாட் திறன் உடைய சூரியசக்தி மின் நிலையங்கள் உள்ளன.
நம் நாட்டில் சூரியசக்தி மின்சாரம் உற்பத்தி யானதும் பயன்படுத்தப்படுகிறது. வெளிநாடுகளில் இந்த மின்சாரம், 'கன்டெய்னர்' போன்று உள்ள அதிக திறன் உடைய பேட்டரியில் சேமிக்கப்பட்டு, இரவில் பயன்படுத்தப்படுகிறது.
மத்திய அரசின் சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் நிறுவனம், பேட்டரி ஸ்டோரேஜில் சேமிக்கும் தொழில்நுட்பத்தில் சூரியசக்தி மின் நிலையம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
உற்பத்தி
எனவே, அந்நிறுவனத்திடம் தமிழகம் தரும் சூரியசக்தி மின்சாரத்தையும் சேமித்து வைத்து, இரவில் திரும்ப வழங்குமாறு மின்வாரியம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில் சூரியசக்தி மின் நிலையங்களில் இருந்து, மழை தவிர்த்த மற்ற நாட்களில் தினமும் சராசரியாக, 5,000 மெகாவாட் உற்பத்தியாகிறது.
இந்த மின்சாரம் உற்பத்தியான உடனே பயன்படுத்தப்படுகிறது. சோலார் எனர்ஜி நிறுவனம், பேட்டரியில் சேமிக்கும் தொழில் நுட்பத்தில் சூரியசக்தி மின் நிலையங்களை அமைக்க உள்ளது.
அந்நிறுவனத்திடம், தமிழகத்தில் உற்பத்தி யாகும் சூரியசக்தி மின்சாரத்தில் பயன்படுத்தியது போக, உபரி இருப்பதை வழங்கவும், அதை பேட்டரி ஸ்டோரேஜ் கட்டமைப்பில் சேமித்து வைத்து, இரவில் திரும்ப வழங்குமாறும் வலியுறுத்தப்பட்டு உள்ளது.
இது செயல்பாட்டிற்கு வந்தால், இரவில் மின் தேவையை பூர்த்தி செய்ய, மின்சார சந்தையில் வாங்க வேண்டிய அவசியம் ஏற்படாது.
ஆய்வு
இந்த தொழில்நுட்பத்தில் 1 மெகாவாட் திறனில் மின் நிலையம் அமைக்க, 10 கோடி ரூபாய் வரை செலவாகும். ஐந்து ஆண்டுகளுக்கு முன் 1 யூனிட் சூரியசக்தி மின்சாரம், 5 ரூபாய்க்கு மேல் வாங்கப்பட்டது; தற்போது, 3 ரூபாய்க்கு கீழ் கிடைக்கிறது.
எனவே, பேட்டரி ஸ்டோரேஜ் உடன் கூடிய மின் நிலையத்தை தற்போதே அமைக்கலாமா அல்லது வரும் ஆண்டுகளில் திட்டச் செலவு குறைந்த பின் அமைக்கலாமா என்பது தொடர்பாக ஆய்வு செய்யப்படுகிறது.
இந்த அறிக்கை கிடைத்ததும், அதற்கு ஏற்ப முடிவுகள் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.