நுகர்வோர் கோர்ட்களில் காலியிடம்; தாமாக விசாரிக்கிறது ஐகோர்ட்
நுகர்வோர் கோர்ட்களில் காலியிடம்; தாமாக விசாரிக்கிறது ஐகோர்ட்
ADDED : டிச 05, 2024 11:55 PM

சென்னை : நுகர்வோர் நீதிமன்றங்களில் காலி பணியிடங்கள் குறித்து, நமது நாளிதழில் வெளியான செய்தி அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து, வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. 'வேலை வாய்ப்பின்மை அதிகரித்துள்ள நிலையில், காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்காதது ஏன்' என்றும், கேள்வி எழுப்பி உள்ளது.
கடந்த ஆகஸ்ட் 21ல், 'தீர்ப்பு வழங்குவதும் அவரே; தட்டச்சு செய்வதும் அவரே. நுகர்வோர் நீதிமன்றங்களின் அவலநிலை' என்ற தலைப்பில், நமது நாளிதழில் செய்தி வெளியானது. நுகர்வோர் நீதிமன்றங்களில், போதிய எண்ணிக்கையில் சுருக்கெழுத்தர், உதவியாளர்கள் இல்லாதது செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டது.
இந்த செய்தியின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து, வழக்கை விசாரணைக்கு எடுத்தது. காலியிடங்களை நிரப்ப உடனடியாக நடவடிக்கை எடுக்க, அரசுக்கு உத்தரவிடும் வகையிலான இந்த வழக்கு, தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
மனிதவள மேம்பாட்டு துறை கூடுதல் செயலர் தாக்கல் செய்த அறிக்கையில், 'மாநிலத்தில் உள்ள 32 மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்களில், 11 இளநிலை உதவியாளர்கள், 2 சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மாநில நுகர்வோர் நீதிமன்றத்தில் காலியாக இருந்த இரு சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களுக்கும், 14 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கும், தேர்வாணையம் வாயிலாக தேர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன' என்று கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை பதிவு செய்த முதல் பெஞ்ச், தாலுகா அளவிலான நீதிமன்றங்களில் உள்ள காலியிடங்களை சுட்டிக்காட்டி, 'வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ள நிலையில், காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்காதது ஏன்' என்று கேள்வி எழுப்பியது.
காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தி, கூடுதல் அறிக்கை தாக்கல் செய்ய ஏதுவாக, விசாரணையை, ஜனவரி 23க்கு முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.