ADDED : பிப் 18, 2025 10:10 PM
விருதுநகர்:தேசிய விலங்கு நோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ், கால்நடை பராமரிப்புத் துறை வாயிலாக பசு, எருமை கன்றுகளுக்கு நாளை முதல் கருச்சிதைவு நோய் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
புரூசெல்லோசிஸ் என்பது பசு, எருமை மாடுகளுக்கு கருச்சிதைவு, மலட்டுத்தன்மை ஏற்படுத்தும் நோயாகும். இது, 'புரூசெல்லா அபார்ட்ஸ்' என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது.
நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு தீவிர காய்ச்சல், சினை ஈன்றும் தருவாயில் கருச்சிதைவு ஏற்படும். மேலும், நஞ்சுக்கொடி தங்குதல், மீண்டும் எளிதில் சினை பிடிக்காமை, பால் உற்பத்தி குறைந்து உரிமையாளர்களுக்கு பொருளாதார இழப்பு உண்டாகும்.
நோயால் பாதிக்கப்பட்ட மாட்டின் நஞ்சுக்கொடி ஆகியவற்றை கையாளும் பட்சத்தில், மனிதர்களுக்கும் தீவிர தாக்கத்தை ஏற்படுத்தும்.
இதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய விலங்கு நோய் கட்டுப்பாட்டு திட்டத்தில், கருச்சிதைவு நோய் தடுப்பூசி நாளை துவங்கி மார்ச் 19 வரை செலுத்தப்படுகிறது.

