ஜூலையில் வெளியாகிறது 'வள்ளுவர் மறை வைரமுத்து உரை' குறள் நுால்
ஜூலையில் வெளியாகிறது 'வள்ளுவர் மறை வைரமுத்து உரை' குறள் நுால்
ADDED : மே 23, 2025 01:40 AM

சென்னை:கவிஞர் வைரமுத்து எழுதியுள்ள 'வள்ளுவர் மறை வைரமுத்து உரை' என்ற திருக்குறள் உரை நுால், வரும் ஜூலையில் வெளியிடப்பட உள்ளது.
கன்னியாகுமரியில் கருணாநிதி அமைத்த திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழாவில் உரையாற்றிய வைரமுத்து, திருக்குறளுக்கு உரை எழுதப் போவதாக அறிவித்தார். அதன்படி, இப்போது திருக்குறளுக்கு உரை எழுதி முடித்துள்ளார்.
திருக்குறளுக்கு பரிமேலழகர், வ.உ.சிதம்பரனார், திரு.வி.கல்யாணசுந்தரனார், தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், தேவநேய பாவாணர், நாமக்கல் கவிஞர், மு.வரதராசனார், புலவர் குழந்தை, சி.இலக்குவனார், கருணாநிதி, நெடுஞ்செழியன் என்று பலரும் உரை எழுதியுள்ளனர். அந்த உரைகளில் இருந்து தன்னுடையது மாறுபட்டது என்று வைரமுத்து கூறினார்.
அறிவியலுக்காக எழுதப்பட்ட திருக்குறளுக்கு, அறிவியல்படி உரை எழுதியிருப்பதாக அவர் தெரிவித்தார்.
'இது டிஜிட்டல் தலைமுறைக்கானது; மின்னல் தெறிக்கும் மொழியில் எழுதப்பட்டது. எளிமையும் துல்லியமும் உடையது; பண்டிதரையும், பாமரரையும் ஒருசேரச் சென்றடைவது. அறத்துப்பாலும், பொருட்பாலும் ஞானத் தமிழில் இருக்கும். இன்பத்துப்பால் கவிதை மொழியில் இனிக்கும்' என்றார்.
'வள்ளுவர் மறை வைரமுத்து உரை' ஜூலையில் வெளியிடப்படுகிறது. இதன் வாயிலாக, தன் பிறவிப் பெரும் கடமை நிறைவேறியதாக வைரமுத்து குறிப்பிட்டார்.