சீமான் மீது வருண்குமார் தொடர்ந்த வழக்கு ரத்து: ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு
சீமான் மீது வருண்குமார் தொடர்ந்த வழக்கு ரத்து: ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு
ADDED : நவ 27, 2025 06:04 PM

மதுரை: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் தொடர்ந்த வழக்கை ஐகோர்ட் மதுரை கிளை ரத்து செய்துள்ளது.
ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார், திருச்சி மாவட்ட எஸ்பியாக இருந்த போதே, ஒரு வழக்கு ஒன்றில் சீமானுடன் மோதல் ஏற்பட்டது. இருவரும் பரஸ்பரமாக குற்றச்சாட்டுகளையும், விமர்சனங்களையும் முன்வைத்து வந்தனர். திருச்சி டிஐஜி ஆக பணிபுரிந்த வருண்குமார், தற்போது சென்னையில் சிபிசிஐடி டிஐஜி ஆக பணியாற்றி வருகிறார்.
இவர், திருச்சி 4வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் '' தன் மீதும், குடம்பத்தினர் மீதும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் தூண்டுதலின் பேரில் நாம் தமிழர் கட்சியினர் சமூக ஊடகங்களில் அவதூறு பரப்புகின்றனர். இது தொடர்பாக சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் சீமான் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து இருந்தார்.
தொடர்ந்து, தன் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்யவும், விசாரணைக்கு தடை கோரியும் ஐகோர்ட் மதுரை கிளையில் சீமான் மனுத்தாக்கல் செய்தார். இதனை விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை, விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து இருந்தது.
இந்நிலையில், இன்று சீமானுக்கு எதிராக வருண்குமார் தொடர்ந்த வழக்கை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

