டெல்டாவில் நெற்பயிர்கள் சேதம் வாசன், தினகரன் கண்டனம்
டெல்டாவில் நெற்பயிர்கள் சேதம் வாசன், தினகரன் கண்டனம்
ADDED : நவ 19, 2024 07:39 PM
சென்னை:'டெல்டா மாவட்டங்களில், வாய்க்கால்கள் முறையாக துார் வாரப்படாததால், மழைநீரில் நெற்பயிர்கள் மூழ்கியுள்ளன. அவற்றை பாதுாக்க, அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது' என, த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன், அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
அதன் விபரம்:
ஜி.கே.வாசன்:
டெல்டா மாவட்டங்களில், தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நெற்பயிர்கள் நீரில் முழ்கி உள்ளன. தஞ்சையில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வாய்க்கால்கள், முறையாக துார் வாரப்படவில்லை. இதனாலே மழை நீரில் நெற்பயிர்கள் மூழ்கி உள்ளன என, விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். ஆயிரக்கணக்கான ஏக்கர் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள், மழை நீரில் மூழ்கி, விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளன. மழை நீரில் மூழ்கியுள்ள, பயிர்களை காக்க, உரிய நடவடிக்கையை தமிழக அரசும், கலெக்டரும் எடுக்க வேண்டும்.
தினகரன்:
விளை நிலங்களில் தேங்கியிருக்கும் மழை நீரை, போர்க்கால அடிப்படையில் வெளியேற்ற, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிவரும் காலங்களில் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாத வகையில், பருவமழைக்கு முன்பாகவே, கால்வாய்களை முறையாக துார் வார வேண்டும். விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.