ADDED : டிச 16, 2024 12:47 AM
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகுவதாக, அக்கட்சியில் இருந்து 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட, ஆதவ் அர்ஜுனா அறிவித்துள்ளார்.
டிச., 6ல் அம்பேத்கர் நினைவு தினத்தன்று, சென்னையில் நடந்த, 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' நுால் வெளியீட்டு விழாவில், வி.சி.க., துணைப் பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா பங்கேற்றார்.
அதில், த.வெ.க., தலைவர் விஜயும் பங்கேற்றார். இருவரும் தி.மு.க.,வை கடுமையாக விமர்சித்து பேசியது, தி.மு.க., கூட்டணியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஆதவ் அர்ஜுனாவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என, தி.மு.க., தரப்பிலும், சொந்த கட்சியிலும் திருமாவளவனுக்கு கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டது.
இதையடுத்து, ஆதவ் அர்ஜுனாவை கட்சியில் இருந்து, ஆறு மாதங்களுக்கு 'சஸ்பெண்ட்' செய்து, வி.சி.க., தலைவர் திருமாவளவன் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, த.வெ.க.,வில் ஆதவ் அர்ஜுனா இணைவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில், வி.சி.க.,வில் இருந்து விலகுவதாக, அவர், நேற்று அறிவித்தார்.
திருமாவளவனுக்கு ஆதவ் அர்ஜுனா எழுதியுள்ள கடிதம்:
வி.சி.க.,வின் வியூக வகுப்பாளராக பணியாற்ற துவங்கி, கட்சியின் அடிப்படை உறுப்பினராக இணைந்தேன். எனக்கு துணைப் பொதுச்செயலர் பதவி கொடுத்தீர்கள். அந்த பொறுப்புகளோடு, கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றினேன்.
சமூகத்தில் புரையோடி போயிருக்கும், ஜாதிய கட்டமைப்புகள், அதன் அடித்தளம், தொடர்ந்து நீளும் அதன் அதிகார கரங்கள், பாதிக்கப்படும் மக்களின் துயர்கள் ஆகியவற்றை களப்பணிகளில் உணர்ந்தேன்.
அதற்கு எதிரான செயல் திட்டங்களை, கொள்கை ரீதியாக வகுத்து, என்னை செயல்பட வைத்த வி.சி.க.,வுக்கு, நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன்.எளிய மக்கள், குறிப்பாக ஜாதிய ஆதிக்கத்தினால், காலம், காலமாக புறக்கணிக்கப்பட்ட மக்கள், அதிகாரத்தை அடைய வேண்டும் என்ற நோக்கில்தான், என்னை வி.சி.க.,வில் இணைத்துக் கொண்டேன்.
கொள்கைகளிலும் நிலைப்பாடுகளிலும் எனக்கு எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை. குறிப்பாக, கட்சியின் வளர்ச்சி என்ற ஒற்றை காரணியை தாண்டி, எனக்கு வேறு எந்த செயல் திட்டங்களும் இல்லை.
எனக்குள் எழுந்த, சில நியாயமான கோபங்கள் மற்றும் மக்கள் நலனுக்கு எதிரான விவகாரங்களில், என்னிடமிருந்து வெளிப்படும் கருத்துக்கள், விவாதப்பொருளாக மாறுகின்றன.
அது ஒருகட்டத்தில் எனக்கும், உங்களுக்கும் இடையே விரிசலை ஏற்படுத்தும் போக்காக மாறுவதை நான் விரும்பவில்லை. கட்சியிலிருந்து என்னை இடைநீக்கம் செய்த நிலையில், இதுபோன்ற வீணான விவாதங்களுக்கு வழிவகுக்கக்கூடாது என, எண்ணுகிறேன்.
பெண்ணடிமைத்தனம், மக்களை வஞ்சிக்கும் ஊழல் ஆகியவற்றை ஒழிக்கும் அரசியல் போராட்டங்களில், தங்களுடன் தொடர்ந்து பயணிக்கவே விரும்புகிறேன்.
எனவே, என்னைப் பற்றிய தேவையற்ற விவாதங்கள், பொதுவெளியில் தொடராமல் இருக்க வேண்டும் என்ற நோக்கில், வி.சி.க.,வில் இருந்து முழுமையாக என்னை விடுவித்துக் கொள்கிறேன்.
இனி வரும் காலங்களில், உங்கள் வாழ்த்துகளுடன், மக்களுக்கான ஜனநாயகம், சமத்துவம், சம நீதி என்ற அடிப்படையில் எனது அரசியல் பயணம் தொடரும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

