ADDED : அக் 20, 2024 02:27 AM
சென்னை:மகாராஷ்டிராவில் 'இண்டி' கூட்டணியை எதிர்த்து 10 தொகுதிகளில் வி.சி., போட்டியிடுகிறது.
மகாராஷ்டிராவில் உள்ள 288 சட்டசபை தொகுதிகளுக்கு நவம்பர் 20ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கவுள்ளது. 'இண்டி' கூட்டணியில் உள்ள காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு பேச்சு நடந்து வருகிறது. இந்நிலையில் 'இண்டி' கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியும், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியும் கூட்டணி அமைத்து தலா 10 தொகுதிகளில் 'இண்டி' கூட்டணி வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடுகின்றன.
இது தொடர்பாக வி.சி., தலைவர் திருமாவளவன் வெளியிட்ட அறிக்கை:
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் வி.சி., கட்சி 10 தொகுதிகளிலும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி 10 தொகுதிகளிலும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. மற்ற தொகுதிகளில் 'இண்டி' கூட்டணியை ஆதரிக்கிறோம்.
கங்காபூர், பத்நாபூர், நன்டெட் தெற்கு, ஹிங்கோலி, கல்மனுரி, வாஸ்மாட், தெக்லூர், அவுரங்காபாத் மத்தி, மும்பை முள்ளன்ட், கன்னட் ஆகிய தொகுதிகளில் வி.சி., போட்டியிடும். பிவாண்டி, மலேகோன், வாசிம், அவுரங்காபாத் மேற்கு, அவுரங்காபாத் கிழக்கு, புலம்பிரி, மும்பை மலாட், தாராவி, போக்கர்டன் ஜல்னா, துலே ஆகிய தொகுதிகளில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி போட்டியிடும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.