வேங்கைவயல் சம்பவத்தில் தவறான தகவல் பரப்பக்கூடாது: தமிழக அரசு
வேங்கைவயல் சம்பவத்தில் தவறான தகவல் பரப்பக்கூடாது: தமிழக அரசு
ADDED : ஜன 25, 2025 01:26 PM

சென்னை: வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்பக்கூடாது என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில், 2022ம் ஆண்டு டிச., 26ல், குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கை, இரண்டு ஆண்டுக்கு மேலாக, சி.பி.சி.ஐ.டி., விசாரித்து வருகிறது. விசாரணை முடிந்து, புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
அந்த அறிக்கையில், வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவை கலந்த விவகாரத்தில் 3 பேருக்கு தொடர்பு உள்ளது. முத்துக்கிருஷ்ணன், சுதர்சன் ஆகியோர் இந்த பாதகச்செயலை செய்துள்ளனர். முரளிராஜா பொய்த்தகவல் பரப்பியுள்ளார். முத்துக்காடு பஞ்சாயத்து தலைவரின் கணவரை பழிவாங்கும் நோக்கில் குற்றம் செய்துள்ளனர், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் வேங்கை வயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தான் என்றும், வெளியாட்கள் யாரும் இந்த செயலில் ஈடுபடவில்லை என்றும் கூறப்பட்டிருந்தது.
கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட இந்த அறிக்கைக்கு எதிர்ப்புகளும், விமர்சனங்களும் கிளம்பிய நிலையில், தமிழக அரசு பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளது.
அதில் கூறியிருப்பதாவது:
கிராம சபைக் கூட்டத்தில் ஆயுதப்படை காவலர் முரளிராஜாவின் தந்தை ஜீவானந்தத்தை அவமானப்படுத்தும் விதமாக, முத்துக்காடு ஊராட்சி தலைவர் பத்மாவின் கணவர் முத்தையா திட்டியுள்ளார். அதற்கு பழிவாங்கும் நோக்கில், முரளிராஜாவால் இந்தச் செயல் திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டது ஆதாரப்பூர்வமாக தெரிய வந்துள்ளது.
வேங்கை வயல் சம்பவத்தில் முரளிராஜா, சுதர்சன், முத்தையா மற்றும் முத்துகிருஷ்ணனின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு தடயவியல் பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில், பல புகைப்படங்கள், உரையாடல்கள் அழிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. இதில், சம்பந்தப்பட்ட 3 பேரின் மீது சி.பி.சி.ஐ.டி., கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. வேங்கை வயல் சம்பவம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்பக்கூடாது. தனிப்பட்ட விரோதத்தால் 3 பேர் இந்தக் குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளனர், இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஐகோர்ட்டில் தாக்கல் செய்த போலீசாரின் குற்றப்பத்திரிகைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு விசாரணையை சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து, போலீசாரின் குற்றப்பத்திரிகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வேங்கை வயல் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி வேங்கை வயல் கிராமத்திற்கு நுழைய முயற்சித்த வி.சி.க.,வினர் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.