மீனவர்களுடன் இணைந்து வெற்றிக்கழகம்...போராட்டம்! செயற்குழு கூட்டத்தில் அறிவித்தார் விஜய்
மீனவர்களுடன் இணைந்து வெற்றிக்கழகம்...போராட்டம்! செயற்குழு கூட்டத்தில் அறிவித்தார் விஜய்
UPDATED : நவ 04, 2024 02:52 AM
ADDED : நவ 04, 2024 12:10 AM

'தமிழக மீனவர்கள் தொடர்ந்து சந்தித்து வரும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்காக, தமிழக வெற்றிக் கழகம் மீனவர்களுடன் சேர்ந்து போராட்டம் நடத்தும்' என, நடிகர் விஜய் அறிவித்துள்ளார். மற்ற கட்சிகள் மீனவர்களுக்கு ஆதரவாக அறிக்கை மட்டும் கொடுத்து வரும் நிலையில், விஜயின் போராட்ட அறிவிப்பு, மீனவர்கள் மத்தியில் உற்சாகத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தி உள்ளது.
தமிழக கடலோர மாவட்டங்களில் அதிகமாகவும், உள் மாவட்டங்களில் குறிப்பிட்ட அளவிலும் வாழும் மீனவர்களை, தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் விளம்பர வெளிச்சம் இல்லாமல் சில மாதங்களாக சந்தித்து பேசி வந்தனர்.
சந்திப்பு
'எல்லை தாண்டி மீன் பிடித்த காரணத்துக்காக, இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதையும், இலங்கை சிறைகளில் தண்டனை அனுபவிப்பதையும், ஊடகம் வாயிலாக விஜய் அறிந்து உள்ளார்.
'எனினும், அதன் முழுமையான பின்னணி என்ன, மீனவர்கள் எதிர்கொள்ளும் ஏனைய பிரச்னைகள் என்ன என்பதை கேட்டறிந்து வருமாறு எங்களை அனுப்பி இருக்கிறார்' என்று அறிமுகம் செய்து கொண்டு, மீனவர் சங்க பிரதிநிதிகளையும், மீனவ குடும்பங்களையும் அவர்கள் சந்தித்து பேசினர்.
பிரச்னைகளுக்கு தீர்வு காண தமிழக, மத்திய அரசுகள் இதுவரை என்ன முயற்சிகள் எடுத்தன; அவை ஏன் பலன் அளிக்கவில்லை? எப்படி தீர்வு காணலாம் என நீங்கள் யோசனை வைத்திருக்கிறீர்களா என்று கேட்டு, அனைத்து தகவல்களையும் சேகரித்தனர்.
விஜயிடம் அறிக்கை அளித்தனர். அதை படித்த பின், மீனவ பிரதிநிதிகள் சிலரை சென்னைக்கு வரவழைத்து விஜய் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, 'த.வெ.க., தொடர்ந்து உங்கள் பிரச்னைகளை பொதுவெளியில் வலியுறுத்தும். மற்றவர்களை போல அறிக்கை வெளியிட்டு அல்லது கடிதம் எழுதி விட்டு கடந்து போக மாட்டேன். வார்த்தை ஜாலத்தால் மக்களை மூளைச்சலவை செய்ய மாட்டேன். செயலில் காட்டுவேன்' என்று விஜய் கூறியுள்ளார்.
தீர்மானம்
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம், பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேற்று விஜய் தலைமையில் நடந்தது. அந்தக் கூட்டத்தில், மீனவர்கள் பிரச்னை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் விபரம்:
கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட பிறகே, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் நடுக்கடலில் தொடர்கிறது. நாடுகளுக்கு இடையேயான குறுகிய கடற்பரப்பில், மீன்பிடித்தலில் ஏற்படும் சிக்கல்களை எவ்வாறு கையாள்வது என்பதை, ஐ.நா.,வின் கடல்சார் சட்டப்பிரகடனம் தெளிவுபடுத்தியுள்ளது.
ஒப்பந்தங்கள்
தீவு கூட்டங்கள் உடைய கடற்பகுதியை கொண்ட நாடுகள், தங்களது மீனவர்களின் மீன்பிடி உரிமையை காத்துக் கொள்ள ஒப்பந்தங்கள் செய்து கொள்ள வேண்டும்.
மீனவர்கள் கடல் எல்லைகளை தாண்டி மீன்பிடித்தலை மனிதாபிமான சிக்கலாகவே பார்க்க வேண்டுமே தவிர, அவர்களை கைது செய்யவோ, சிறைபிடிக்கவோ கூடாது என்று ஐ.நா.,வின் பிரகடனம் தெளிவாக கூறியுள்ளது.
ஆனால், இலங்கை அரசு அதை பின்பற்றவில்லை; இந்திய அரசு வலியுறுத்தவில்லை. தமிழக அரசும் சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பவில்லை. தமிழக வெற்றிக் கழகம் இந்த சர்வதேச சட்டத்தை இலங்கை அரசு மதித்து நடக்க வலியுறுத்தி, மீனவர்களுடன் இணைந்து போராட்டம் நடத்தும்.
மகிழ்ச்சி
இவ்வாறு மீனவர்கள் பிரச்னை குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வேறு விஷயங்கள் குறித்து மேலும், 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மீனவர் பிரச்னைக்கான போராட்ட தேதி எதையும் நேற்றைய கூட்டத்தில் அறிவிக்கவில்லை.
பல தரப்புடனும் ஆலோசித்து, யாருடைய வாழ்வாதாரமும் பாதிக்காத வகையில், போராட்டம் நடத்தப்படும் என்று ஒரு நிர்வாகி தெரிவித்தார்.
போராட்டத்தில் விஜய் பங்கேற்பாரா என கேட்ட போது, 'வீரர்களை ஏவிவிட்டு வேடிக்கை பார்ப்பவர் அல்ல எங்கள் தளபதி; களமிறங்கி வாள் சுழற்றுவார், காத்திருந்து பாருங்கள்' என்றார் அவர்.
விஜய் அறிவிப்பு மீனவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஒட்டுமொத்த நாட்டின் கவனமும் தமிழக மீனவர்களின் பிரச்னையை தெரிந்து கொள்ளவும், மத்திய மற்றும் இலங்கை அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்கவும், விஜய் போராட்டம் உதவும் என, மீனவ பிரதிநிதிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
இவ்வாறு விஜய் பேசியதாக கட்சி வட்டாரங்கள் கூறின.
-நமது நிருபர்-