வாரம் ஒரு நாள் மட்டும் விஜய் பிரசாரம் அதற்கும் அனுமதி தராமல் இழுத்தடிப்பு
வாரம் ஒரு நாள் மட்டும் விஜய் பிரசாரம் அதற்கும் அனுமதி தராமல் இழுத்தடிப்பு
ADDED : செப் 10, 2025 06:10 AM

சென்னை: த.வெ.க.வில், 120 மாவட்ட செயலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த மாவட்டங்களில், தன் மக்கள் சந்திப்பு பயணத்தை, அவர் துவங்கவுள்ளார். வரும் 13ம் தேதி சனிக்கிழமை, திருச்சி, பெரம்பலுார், அரியலுார் மாவட்டங்களில் பயணத்தை துவங்குகிறார்.
பிரசாரத்தின்போது, மாவட்ட நிர்வாகிகள் எப்படி தொண்டர்களை வழிநடத்த வேண்டும் என்பது குறித்து, மாவட்ட செயலர்களுக்கு, சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், இரண்டு நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.
இதை தொடர்ந்து, வரும் 20ம் தேதி நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை; 27ம் தேதி திருவள்ளூர், வடசென்னை மாவட்டங்களில், அவர் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். பின், அக்டோபர் 4, 5ம் தேதிகளில், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு; 11ல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி; 18ல், காஞ்சிபுரம், வேலுார், ராணிப்பேட்டை; 25ல் தென்சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் பிரசாரம் செய்யவுள்ளார்.
வரும் நவம்பர் 1ம் தேதி கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்துார்; 8ல், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம்; 15ல் தென்காசி, விருதுநகர்; 22ல் கடலுார்; 29ல் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பிரசாரம் செய்ய உள்ளார்.தொடர்ந்து, டிசம்பர் 6ல் தஞ்சாவூர், புதுக்கோட்டை; 13ல் சேலம், நாமக்கல், கரூர்; 20ல் திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் பிரசாரம் செய்கிறார். வரும் 13 முதல் டிசம்பர் 20 வரைக்கும் வார இறுதி நாளான சனிக்கிழமைகளில் மட்டும், தன் தேர்தல் பிரசாரத்தை விஜய் மேற்கொள்ள உள்ளார்.
இந்த பிரசாரத்திற்கு திருச்சியில் அனுமதி கேட்ட த.வெ.க.வினர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மற்ற மாவட்ட போலீசாரும் அனுமதி தராமல் இழுத்தடிக்க வாய்ப்புள்ளது. இதனால், நீதிமன்றத்தை அணுகி அனுமதி பெற, த.வெ.க. திட்டமிட்டுள்ளது.
''விஜய், கட்சி துவங்கியதில் இருந்து எந்த பொது நிகழ்ச்சியை நடத்துவதாக இருந்தாலும், அனுமதி பெறுவதற்கு ஆளும் தரப்போடு மல்லுக்கட்ட வேண்டியுள்ளது.
எந்த பொது நிகழ்ச்சிக்கும், கேட்டதும் போலீஸ் தரப்பில் அனுமதி கொடுப்பதில்லை. இப்போது, பிரசார சுற்றுப்பயணத்துக்கும் அனுமதி மறுக்கின்றனர். அதனால், சனிக்கிழமைதோறும் பிரசார பயணம் சென்று மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
அந்த அடிப்படையிலேயே, 'வீக் எண்ட்' பிரசார திட்டம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது” என த.வெ.க நிர்வாகிகள் கூறினர்.