ADDED : நவ 08, 2024 08:03 PM
சென்னை:தன்னை வசைபாடியை சீமானுக்கு, த.வெ.க., தலைவர் விஜய், பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய், தன் கட்சியின் முதல் மாநாட்டை, அக்., 27ல் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் நடத்தினார். மாநாட்டிற்கு வாழ்த்து தெரிவித்து, 2026 சட்டசபை தேர்தல் கூட்டணிக்கு, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காத்திருந்தார்.
மாநாட்டில் திராவிடம், தமிழ் தேசிய அரசியல் குறித்து, விஜய் பேசியதால், அவர் மீது சீமான் கடும் கோபம் அடைந்தார். பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான், புதிய கட்சி துவக்கியுள்ள விஜயை, ஒருமையில் வசைபாடினார். 'ஒன்று இந்த பக்கம் நில்; இல்லை அந்த பக்கம் நில். இரண்டும் இல்லாமல் நடு ரோட்டில் நின்றால், லாரியில் அடிபட்டு இறந்து போவாய்' என்றெல்லாம் விஜயை இஷ்டத்துக்கும் விமர்சித்துப் பேசினார்.
இந்நிலையில், சீமான் தன் 58வது பிறந்த நாளை, நேற்று கொண்டாடினார். அவருக்கு, விஜய் வாழ்த்து தெரிவித்து, சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இது த.வெ.க., தொண்டர்கள், நிர்வாகிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
இனிவரும் நாட்களில், சீமானை விமர்சனம் செய்யலாமா, கூடாதா என யோசித்து வருகின்றனர். இதே குழப்பம் சீமானின் நாம் தமிழர் கட்சியினருக்கும் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. 'இத்தனை விமர்சனத்துக்குப் பின்னும், நடிகர் விஜய், சீமானுக்கு பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லி இருக்கும்போது, சீமானுக்காக நடிகர் விஜயையும் அவருடைய கட்சியையும் விமர்சிக்கலாமா என கடும் குழப்பத்தில் கட்சியினர் ஆழ்ந்துள்ளனர்' என நாம் தமிழர் வட்டாரங்களில் கூறினர்.