ADDED : செப் 27, 2025 05:57 AM

சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டி:
மூன்று முறை 'நிடி ஆயோக்' கூட்டத்தை புறக்கணித்த முதல்வர் ஸ்டாலின், ஈ.டி., என்றதும் 'மோடி' என்று பயந்து ஓடுகிறார். முன்னாள் கவர்னர் இல.கணேசன் மறைந்தபோது, தன் சார்பான மலர் அஞ்சலி செலுத்தும் பொறுப்பை பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலினிடம் கொடுக்கிறார் என்றால், ஆர்.எஸ்.எஸ்., கைக்கூலி யார்?
நீண்டகாலமாக அரசியலில் இருந்து துணை முதல்வராகி, முதல்வரானவர் ஸ்டாலின்.
அ.தி.மு.க.,வில் ஒன்றிய செயலராக இருந்து அமைச்சராகி, முதல்வரானவர் பழனிசாமி.
ஆனால், எந்தெந்த ஊரில், மக்களுக்கு என்னென்ன பிரச்னைகள் என்பதை அவர்களுக்கு யாராவது எழுதிக் கொடுக்க வேண்டி இருக்கிறது.
பார்த்து படிக்கும்போது கூட, 'மண்ணரிப்பா... அல்லது மீனரிப்பா...?', நீடா மங்கலமா... அல்லது பீடா மங்கலமா...? என தெரியவில்லை.
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தி.மு.க.,வில் இரண்டு இட்லியையும், அ.தி.மு.க., வில் இரண்டு தோசையையும் எடுத்துக் கொண்டு உப்புமா கிண்டுகிறார்.
இரண்டு சனியன்களிடம் இருந்து சட்டை தைத்து போட்டுக்கொண்டு, சனிக்கிழமை தோறும் கிளம்பி மாற்றத்தை ஏற்படுத்துவதாக புறப்பட்டுள்ளார். இதில், என்ன மாற்றம்?
நாங்கள், உலக அரசியலை உள்ளங்கையில் வைத்துக் கொண்டு திரிகிறோம். ஆப்பிரிக்க நாடான புரிகினோ பாசோவின் அதிபர் இப்ராஹிம் த்ராரே, வெறும் 35 வயது சின்னப் பையன். நான் பேசுவதையே அங்கு பேசுகிறார்; அவரை அந்த ஊர் சீமான் என்கின்றனர்.
ஆனால், இங்கு, என்னை பார்த்து சிரிக்கிறீர்கள். மரங்கள் மாநாடு போட்டபோது சிரித்தீர்கள். பனை மரத்தை சுமக்கிறீர்கள்; இப்போது மட்டும் பனை மரம், ஜாதி மரமில்லாமல், சமூக நீதி மரமாகிவிட்டதா? சீமான் சொன்னால் சிரிப்பது; சினிமாக்காரன் சொன்னால் ரசிப்பது? இதெல்லாம் அவமானமா இல்லையா?
இவ்வாறு அவர் கூறினார்.