விஜயை தி.மு.க., கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே: நேரு
விஜயை தி.மு.க., கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே: நேரு
ADDED : ஜூலை 06, 2025 02:44 AM

திருநெல்வேலி: ''தி.மு.க., கூட்டணிக்கு நடிகர் விஜயை கூப்பிட வில்லையே,'' என அமைச்சர் நேரு தெரிவித்தார்.
திருநெல்வேலியில் நடந்த அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின், நேரு அளித்த பேட்டி:
தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி வலுவாக உள்ளது. அ.தி.மு.க., கூட்டணிக்கு ஆள் பிடித்துக் கொண்டிருக்கிறார் பழனிசாமி. அதனால், அக்கூட்டணி இன்னும் இறுதியாகவில்லை.
பழனிசாமி, இப்போதுதான் தேர்தல் பணியை துவக்குவதாக சொல்லி இருக்கிறார். ஆனால், முதல்வர் ஸ்டாலின் தி.மு.க., சார்பில் தேர்தல் பணியை ஏற்கனவே துவக்கி விட்டார். நாங்கள் பொறுப்பேற்ற போது இரண்டு ஆண்டுகள் கொரோனாவில் கடந்தன.
அதிலிருந்து வெற்றிகரமாக மீண்டு வந்து, தமிழக மக்களுக்கு நற்பணிகளை நான்காண்டுகளாக செய்து முடித்திருக்கிறோம். அதனால், வரும் தேர்தலிலும் நாங்களே வெற்றி பெறுவோம்.
தி.மு.க.,வுடன் தமிழக வெற்றி கழகம் கூட்டணி வைக்காது என நடிகர் விஜய் கூறியிருக்கிறார். அவரை யார் தி.மு.க., கூட்டணிக்கு அழைத்தனர் என்பதே தெரியவில்லை.
யாரும் கூப்பிடாத போது, அவரே கூட்டணி கிடையாது என சொல்லி வருவது நகைச்சுவையாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

