ஆதவ் அர்ஜுனாவுக்கு பதவி வேகமெடுக்கிறது விஜய் கட்சி
ஆதவ் அர்ஜுனாவுக்கு பதவி வேகமெடுக்கிறது விஜய் கட்சி
ADDED : பிப் 01, 2025 02:27 AM
சென்னை:விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஆதவ் அர்ஜுனாவுக்கு, தமிழக வெற்றிக் கழகத்தில், தேர்தல் பிரசார பொதுச்செயலர் பதவி வழங்கப்பட்டு உள்ளது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலராக இருந்தவர் ஆதவ் அர்ஜுனா. வி.சி., தலைவர் திருமாவளவனுக்கு மிகவும் நெருக்கமாக வலம் வந்தார். கூட்டணி வரம்பை மீறி, தி.மு.க.,வுக்கு எதிராக செயல்பட்டதாக தி.மு.க.,வினரால் குற்றம்சாட்டப்பட்டு, அக்கட்சியின் கடும் எதிர்ப்புக்கு ஆளானார்.
இதையடுத்து, வி.சி.,யிலிருந்து அவரை நீக்க வேண்டும் எனவும் தி.மு.க., சார்பில், வி.சி., தலைவர் திருமாவளவனுக்கு கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, ஆதவ்வை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்குவதாக திருமாவளவன் அறிவித்தார். அவரோ கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதற்கிடையில், ஆதவ் ஏற்பாட்டில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில், த.வெ.க., தலைவர் விஜய்யுடன் கைகோர்த்தார்.
சமீபத்தில் விஜயை சந்தித்து, அவருடன் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்தார். அதன்படி, நேற்று கட்சியில் ஆதவ் சேர்க்கப்பட்டார். அவருக்கு தேர்தல் பிரசார பொதுச்செயலர் பதவியை, விஜய் வழங்கியுள்ளார்.
இதேபோல, அ.தி.மு.க.,வில் இருந்து வந்த நிர்மல் குமாருக்கு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவு துணை பொதுச்செயலர் பதவி வழங்கப்பட்டு உள்ளது. இதேபோல, கொள்கை பரப்பு செயலர், இணை பொருளாளர், செய்தி தொடர்பாளர் பதவிகளுக்கும் நிர்வாகிகளை, விஜய் நியமித்துள்ளார்.