கிராம கோவில் பூஜாரிகள் பேரவை மாதாந்திர ஊதியம் கேட்டு தீர்மானம்
கிராம கோவில் பூஜாரிகள் பேரவை மாதாந்திர ஊதியம் கேட்டு தீர்மானம்
ADDED : மார் 03, 2024 04:18 AM
திருச்சி : திருச்சியில், கிராம கோவில் பூஜாரிகள் பேரவை, அருள்வாக்கு அருள்வோர் பேரவை மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது.
நிர்வாக அறங்காவலர் வேதாந்தம்ஜீ தலைமை வகித்தார். வி.எச்.பி., மாநில தலைவர் ஆர்.ஆர்.கோபால்ஜீ முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், 2021 சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க., தேர்தல் அறிக்கையில், கிராம கோவில் பூஜாரிகளுக்கு மாதந்தோறும், 2,000 ரூபாய் ஊதியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு இன்று வரை நிறைவேற்றப்படவில்லை.
எந்தவிதமான வரையறையும் இன்றி, தமிழகம் முழுதும் உள்ள அனைத்து கிராமக் கோவில் பூஜாரிகளுக்கும், 10,000 ரூபாய் மாத ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.
ஓய்வூதியம் பெறும் பூஜாரிகளின் மறைவுக்கு பின், அவரது மனைவிக்கு இச்சலுகை வழங்கப்பட வேண்டும். கருணாநிதி முதல்வராக இருந்த போது, கிராமக் கோவில் பூஜாரிகள் மேம்பாட்டுக்காக அமைக்கப்பட்ட கிராமக் கோவில் பூஜாரிகள் நலவாரியம் இதுவரை செயல்படாமல் முடங்கி உள்ளது.
நலவாரியத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, பழைய உறுப்பினர்களின் பதிவு புதுப்பித்தலில் தமிழக முதல்வர் தனிக்கவனம் செலுத்த வேண்டும். மாநிலத்தில் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட அனைத்துக் கிராமக் கோவில் பூஜாரிகளுக்கும், ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

